இருமல் மருந்து விஷமானது எப்படி? - விசாரணையில் பரபரப்பு தகவல்

22 குழந்தைகள் பலியானது தொடர்பாக இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இருமல் மருந்து விஷமானது எப்படி? - விசாரணையில் பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

பச்சிளம் குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மராட்டிய மாநிலங்களில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த குறிப்பிட்ட இருமல் மருந்தின் பெயர் கோல்ட்ரிப்' என்பதாகும். குழந்தைகள் பலியானது தொடர்பாக இருமல் மருந்து நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நிறுவனத்தை முறையாக ஆய்வு செய்யாத 2 அதிகாரிகளும் அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து எப்படி குழந்தைகளுக்கு விஷமாக மாறியது என்பது குறித்து முதல்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் விவரம் வருமாறு:-

இருமல் மருந்தில் டை எத்திலீன் கிளைகால் என்ற டி.இ.ஜி. மிக அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே குழந்தைகள் மரணத்திற்கு காரணமாக இருப்பது உறுதியாகி உள்ளது. டை எத்திலீன் கிளைகால் மற்றும் எத்திலீன் கிளைகால் ஆகியவை தொழில்துறையில் கரைப்பான் மற்றும் பனி உரைக்கும் ரசாயனங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கையின்படி, மிகக் குறைந்த அளவில் இதை உட்கொண்டால் கூட சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உண்டு. குழந்தைகளின் உயிருக்கு இது மிக ஆபத்தானது. அதாவது இருமல் மருந்துகளில் ப்ராபிலீன் கிளைகால் என்ற செயலற்ற சேர்மம் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. தரமற்ற வியாபாரிகள், அதனுடன் டை எத்திலீன் கிளைகாலை கலக்குகிறார்கள்.

எனவே அதனை வாங்கி சளி மருந்து தயாரித்து உள்ளனர். சளி மருந்தில் டை எத்திலீன் கிளைகால் அளவு அனுமதிக்கப்படும் 0.1 சதவீதத்திற்கு பதிலாக 46 சதவீதமாக இருந்தது. இதுவே குழந்தைகள் மரணத்திற்கு காரணம். மேலும் மிக முக்கியமாக இந்த விவகாரத்தில் விதிகளும் மீறப்பட்டு உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு முதல் இதுவரை உலகளவில் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருமல் மருந்து குடித்ததால் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இந்திய மருத்துவ சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கையில் பெரும்பாலான சளி அல்லது குளிர் நோய் இயல்பாகவே குணமாகிவிடும். எனவே 2 வயதிற்கு குறைவான குழந்தைகளுக்கு இருமல் மருந்து முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com