சாலையின் பெயர் பலகையில் இந்தி எழுத்து வந்தது எப்படி? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்

மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
சாலையின் பெயர் பலகையில் இந்தி எழுத்து வந்தது எப்படி? - ஆதவ் அர்ஜுனா விளக்கம்
Published on: 

சென்னை,

பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டுவந்த இருமொழிக் கொள்கைதான் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் உயிர்க் கொள்கை; நிரந்தரக் கொள்கை! அதில், இன்றும் என்றும் என்றென்றைக்கும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கவே எடுக்காது.

இந்நிலையில், 'மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதி'த் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டதில் சில குளறுபடிகள் நடந்தது அரசின் கவனத்திற்கு வந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட துறை ரீதியிலான விசாரணையில், "குறிப்பிட்ட அதிகாரிகள் சிலரின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மும்மொழியில் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது" என்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக, இந்தத் தவறுக்குக் காரணமான உதவிப் பொறியாளர் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளர் என இரண்டு அதிகாரிகள் நேற்றே (01.10.2026) பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதோடு மூன்று மொழிகளில் வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட அந்த பெயர்ப் பலகையும் உடனடியாக மாற்றப்பட்டு, இருமொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப் பலகை அதே இடத்தில் பொருத்தப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து மேல் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

அரசின் கவனத்திற்கு வந்த சில மணி நேரத்திற்குள் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராக - கொள்கை முடிவுகளுக்கு எதிராக செயல்படும் துறைசார் அதிகாரிகள் சட்டப்படியான - துறை ரீதியான நடவடிக்கைகளுக்கு உள்ளாவார்கள் என்பதையும் இங்கு உறுதியாகக் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளோம். மும்மொழிக் கொள்கை எந்த வடிவத்தில் வந்தாலும் முறியடிப்போம்! இருமொழிக் கொள்கையை என்றென்றும் உயர்த்திப் பிடிப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com