பெண் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவை காதல் வலையில் ராம்குமார் வீழ்த்தியது எப்படி? பரபரப்பு தகவல்கள்

ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு, மதுரையை சேர்ந்த பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் லைக் கொடுத்து உள்ளார்.
காதல் வலையில் ராம்குமார் வீழ்த்தியது எப்படி?
Published on

ராமநாதபுரம்,

சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த சத்தியஷீலாவை போனில் பேசியும், வீடியோக்கள் அனுப்பியும் ராம்குமார் தனது காதல் வலையில் வீழ்த்தியது எப்படி? என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் திருவிழாவில் நடந்த தகராறின்போது ராமர் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா (வயது 42), இவருடைய காதலன் ராம்குமார் (35) உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொலை வழக்கில் சிக்கியது எப்படி? அவருடைய காதலனின் பின்னணி என்ன? இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து போலீசார் பல்வேறு தகவல்களை திரட்டி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த ராம்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. சமூகவலைத்தளங்களில் வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் கொண்ட அவர், ரீல்ஸ் வீடியோக்கள், டிக்-டாக் என்று பதிவேற்றம் செய்து வந்துள்ளார். அவரது வீடியோ பிடித்து லைக் கொடுப்பவர்கள், பெண்களாக இருந்தால் அவர்களிடம் வம்படியாகச் சென்று பேசுவது ராம்குமாரின் வழக்கம். சிலர் அவரது பேச்சில் நம்பிக்கை வைத்து மணிக்கணக்கில் தொடர்ந்துள்ளனர்.

அவ்வாறு வீடியோவுக்கு லைக் கொடுத்து பேசத்தொடங்கியவர்களில் ஒருவர்தான் சத்தியஷீலா. முதலில் அவர் சாதாரண பெண் போலத்தான் பேசி இருக்கிறார். சில நாட்களில் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதும், தனியாக வசிப்பதும் ராம்குமாருக்கு தெரியவந்ததால், அவரை தனது காதல் வலையில் வீழ்த்தி உள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் மேலும் கூறியதாவது:-

ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றுவதற்கு முன்பாக சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து மகளிர் போலீஸ் இ்ன்ஸ்பெக்டராக சத்திய ஷீலா பணியாற்றி வந்துள்ளார். அப்போது தேவகோட்டையில் உள்ள போலீசார் குடியிருப்பில் வசித்து வந்தார். அங்கு வசித்தபோதுதான் ராம்குமாருடன் தொடர்பு ஏற்பட்டு நெருங்கி பழகி உள்ளார். இதைத்தொடர்ந்து ராம்குமாரை தன்னுடனே அவர் தங்க வைத்தார். நாளடைவில் இதுதொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வரத்தொடங்கின.

இந்த நிலையில் இன்னொரு திருப்பமாக ராம்குமாரின் ரீல்ஸ் வீடியோவுக்கு, மதுரையை சேர்ந்த பெண் போலீஸ் உயர் அதிகாரி ஒருவரும் லைக் கொடுத்து உள்ளார். அதிகாரியைப்பற்றி தெரிந்து கொண்டு, ராம்குமார் தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் ராம்குமாரின் தகவல்கள் வரம்பு மீறியதால் அவரை பற்றி விசாரித்த போது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவுடன், ராம்குமார் வசித்து வந்தது தெரிந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பெண் அதிகாரி உத்தரவின் பேரில் ராம்குமாரை மதுரைக்கு கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் ஏற்கனவே சில பெண்களை ஏமாற்றி நகை உள்ளிட்டவற்றை மோசடி செய்த அதிர்ச்சி தகவல் சத்திய ஷீலாவிற்கு தெரிய வந்தது. அதனால் தனக்கு எதுவும் பிரச்சினை வந்துவிடுமோ என்ற அச்சத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சத்திய ஷீலா தலைமறைவானார்.

விசாரணைக்கு பின் ராம்குமார் திருப்பி அனுப்பப்பட்ட தகவல் கிடைத்த பின்னரே, மீண்டும் இருப்பிடத்திற்கு வந்துள்ளார்.

இதுபோன்று சத்திய ஷீலா மீதும் தொடர்ந்து புகார்கள் வந்ததால் அவர் அங்கிருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் அலுவலக இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார்.

அதன்பின்பு சத்தியஷீலா தனது செல்வாக்கை பயன்படுத்தி, சைபர்கிரைம் பிரிவுக்கு கூடுதல் பொறுப்பு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். புகார்களில் சிக்கி உள்ள இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா, 2 பணிகளில் அதிகாரியாக நியமிக்கப்பட்டது போலீசார் மத்தியில் பரபரப்பாகவும் பேசப்பட்டது. இந்த சூழலில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தன்னுடன் இருந்த ராம்குமாருடன், சென்றபோது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையில் சிக்கி சிறை சென்று இருப்பது போலீஸ் வட்டாரத்தை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com