பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் ரூ.57 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றது எப்படி? - டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் டாஸ்மாக் நிறுவனம் ரூ.57 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டு டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் ரூ.57 கோடி செல்லாத நோட்டுகளை பெற்றது எப்படி? - டாஸ்மாக் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
Published on

சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அதாவது, அந்த சமயத்தில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றும், இந்த நோட்டுகளை டிசம்பர் மாதம் 31-ந் தேதிக்குள் வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்றும் அரசு உத்தரவிட்டது.

தனிநபர் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை செலுத்தி புதிய நோட்டுகளை பெற முடியும் என்றும் அரசு அறிவித்தது. இதன்காரணமாக பொதுமக்கள், தங்கள் வசம் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுக்களை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களாக மாற்றினர்.

கோடிக்கணக்கான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் இந்த ரூபாய் நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களை வருமான வரித்துறை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டது.

அந்த வரிசையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிர்வாகமும் பணமதிப்பிழப்பு காலகட்டத்தில் (2016-ம் ஆண்டு நவம்பர் 9-ந்தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை) ரூ.57.29 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு பணமதிப்பிழப்பு அறிவிப்பை வெளியிட்ட பின்பு, டாஸ்மாக் நிறுவனம் ரூ.57.29 கோடிக்கான செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றது வருமான வரித்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின்பு, செல்லாத ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் நிறுவனம் பெற்றது ஏன்? என்பது குறித்தும், ரூ.57.29 கோடிக்கு செல்லாத ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் நிறுவனம் வங்கியில் டெபாசிட் செய்ததில் குளறுபடி நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் வருமான வரித்துறை விசாரணையை தொடங்கியது.

மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக்கோரி டாஸ்மாக் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு டாஸ்மாக் நிர்வாகம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக பணமதிப்பிழப்பு அறிவிப்பின்போது செல்லாத ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி விளக்கத்தை ஏற்க வருமான வரித்துறை மறுத்துள்ளது. இதைத்தொடர்ந்து 57.29 கோடி ரூபாயை விளக்கம் தரப்படாத பணம் எனக்கூறி அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த 2016-2017-ம் ஆண்டில் டாஸ்மாக் நிர்வாகம் செலுத்திய வருமான வரி கணக்கை ஆய்வு செய்த போது ரூ.57.29 கோடிக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை டாஸ்மாக் நிர்வாகம் வங்கியில் டெபாசிட் செய்தது தெரியவந்தது.

ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கீழ் இயங்கும் தமிழக அரசுக்கு சொந்தமான ஒரு நிறுவனம், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்றது எப்படி? என்று தெரியவில்லை. மேலும், மாவட்டந்தோறும் எவ்வளவு செல்லாத ரூபாய் நோட்டுகள் பெறப்பட்டது என்ற விவரத்தையும் டாஸ்மாக் தெரிவிக்கவில்லை.

டாஸ்மாக் அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. எனவே, இந்தப்பணம் விளக்கம் தரப்படாத பணமாகவே கருதப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com