டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி? - பரபரப்பு தகவல்

கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளன.
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு நடந்தது எப்படி? - பரபரப்பு தகவல்
Published on

சென்னை,

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், பரபரப்பு தகவல்கள் உள்ளன.

விவரங்கள் வருமாறு:-

கட்சி நிதி

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக அரசு அனுப்பிய புகார் கடிதத்தின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மதுபான ஆலைகளில் மதுபானங்கள் கொள்முதல் செய்வது, பார்கள் நடத்துவது, வாகன போக்குவரத்து, பழைய பாட்டில் களை வாங்குவது, டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளை பணி நியமனம் செய்வது உள்ளிட்டவற்றில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரும் கூட்டாக சேர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். கடந்த 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை முறைகேடுகள் நடந்துள்ளன.

கொஞ்சம் கூட விதிமுறைகளை பின்பற்றாமல், அவர்கள் இஷ்டத்துக்கு முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதைதவிர, 'பார்ட்டி பண்ட்' (கட்சி நிதி) என்ற பெயரில் கட்சி நிதியும் முறைகே டாக வசூலிக்கப்பட்டு உள்ளது. மதுப்பிரியர்களிடம் இருந்தும், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு மதுபாட்டில்களுக்கு ரூ.500 வரை வசூலித்துள்ளார்கள். 'கரூர் கேங்' என்ற பெயரில் செயல்பட்டவர்கள் இந்த கட்டண வசூலில் ஈடுபட்டுள்ளனர். ரத்தேஷ்ராஜ் சண்முகவேலும், மூலனூர் கார்த்திக்கும் டாஸ் மாக்கில் நடந்த முறைகேடுகளுக்கு மூல காரணமாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் சொல்படி விசாகனும், மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகனும், பன்னீர் செல்வமும் மற்றும் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளும் செயல்பட்டுள்ளனர்.

பார்கள் டெண்டர் முறைகேடு

பார்கள் டெண்டர் விட்டதிலும் முறைகேடு நடந்துள்ளது. இவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே டெண்டரில் கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறார்கள். இதன்மூலம் அரசுக்கு கோவை வடக்கில் ரூ.17.27 கோடியும், கோவை தெற்கில் ரூ.13.58 கோடியும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.95 கோடியும் வருமான இழப்பு ஏற்பட்டது. இந்த வருமான இழப்பு 2022 மற்றும் 2023-ம் ஆண்டில் மட்டும் கணக்கிடப்பட் டுள்ளது. டாஸ்மாக் நிறுவனம், வாகனங்கள் பயன்பாட்டுக்காக ஆண்டுக்கு ரூ.100 கோடி செலவிட்டு வருகிறது. இதிலும் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது.

மேலோட்டமாக...

முதல் தகவல் அறிக்கையில் மொத்தமாக அரசுக்கு எவ்வளவு வருமான இழப்பு ஏற்பட்டது என்பதை குறிப்பிடவில்லை. மேலோட்டமாக ஒவ்வொரு பிரிவு வாரியாக நடந்த, குறிப்பாக பார்களில் நடந்த முறைகேடு விவரங்கள், மதுபிரியர்களிடம் அதிகமாக நடத்திய வசூல் வேட்டை மட்டுமே கூறப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரை டாஸ்மாக்கில் நடந்த முறைகேடுகள் மூலம் மொத்தமாக அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக கூடுதலாக பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட முழுமையான வருமான இழப்பு பற்றி தெரிவிக்கப்படும் என்று லஞ்சஒழிப்புதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com