

கோவை,
கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் க்ரிஷ் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நான் மிகவும் நேசிக்கும் நமது பின்தொடர்பவர்களில் சிலருடைய மனநிலையை நினைத்து நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை பொய்க்கப்போகிறது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.
2017-ம் ஆண்டிற்குப் பிறகு, தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை நடப்பு ஆண்டை விட மோசமான ஒரு ஆண்டு இருந்ததே இல்லை. கடந்த காலங்களில் அதிக மழைப்பொழிவு இருந்த ஆண்டுகளைப் பற்றி முதன்முதலில் பதிவிட்டு மகிழ்ந்தவன் நான் தான்.
அதிக மழை பெய்த அந்த ஆண்டுகளிலேயே, எதிர்காலத்தில் நிச்சயம் வறட்சி ஏற்படும் என்று நான் எச்சரித்திருந்தேன். ஏனெனில், இந்த பூமி உருவான காலத்திலிருந்தே வறட்சியும் வெள்ளமும் ஒரு சுழற்சியாகவே இருந்து வருகின்றன. தொழில்மயமாக்கல் காரணமாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், இந்த வறட்சியும் வெள்ளமும் இப்போது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு தீவிரமடைந்துள்ளன.
இப்போது, அதிகப்படியான ஆழ்துளை கிணறுகள் அமைப்பது, தென்னை அல்லது பாக்கு போன்ற அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களை அதிகரிப்பது அல்லது ஊடுபயிர் செய்வது போன்ற காரணங்களால் நாம் உண்மையிலேயே திகைத்து நிற்கிறோம்.
இந்த ஆண்டும் அடுத்த ஆண்டு கோடையிலும் நாம் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்; ஏனெனில் இந்த ஆண்டு நிச்சயமாக ஒரு 'சூப்பர் எல் நினோ' ஆண்டாக இருக்கும். இதன் பக்கவிளைவுகள் அடுத்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வரை கூட நீடிக்கும்.
கடந்த 9 ஆண்டுகளாக என்னால் இயன்றவரை நமது விவசாயிகளுக்கு உதவி செய்து எனது பங்களிப்பை வழங்கியிருக்கிறேன். வானிலையில் சாதகமற்ற சூழல் இருக்கும்போது, வானிலை கணிப்புக்கு நான் உண்மையாக இருக்க வேண்டும், உங்களுக்கு அதை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். தங்களுக்கு அதிக பின்தொடர்பவர்களைப் பெறுவதற்காக, இன்னும் கனமழை பெய்யும் என்ற தவறான கருத்துக்களைக் கூறி மக்களை ஏமாற்றும் பலர் இப்போதும் இருக்கிறார்கள். சுயநலத்திற்காக எனது பின்தொடர்பவர்களை ஏமாற்றுபவர்களில் ஒருவனாக நான் நிச்சயமாக இருக்க மாட்டேன்.
நண்பர்களே, அடுத்த கனமழை எப்போது வரும் என்ற பின்தொடர்பவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலேயே கடந்த சில மாதங்கள் மிகவும் பரபரப்பாகவும் சோர்வாகவும் கழிந்துவிட்டன. எனது மன அமைதிக்காக இதிலிருந்து எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது.
வரவிருக்கும் நாட்களில் சாதகமான சூழல் ஏதேனும் ஏற்படும்போது நான் நிச்சயமாக இங்கு பதிவிடுவேன். அதுவரை எங்களிடமிருந்து தினசரி வானிலை அறிக்கையை எதிர்பார்க்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.