‘தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் குறித்து எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?’ - டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஆட்கொணர்வு வழக்குகள் தொடர்பான உத்தரவுகள் மீது தீவிரமான விசாரணை எதுவும் நடத்தப்படுவதில்லை என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
‘தமிழ்நாட்டில் காணாமல் போனவர்கள் குறித்து எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?’ - டி.ஜி.பி. பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
Published on: 

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த சங்கர் ராஜ் என்பவரை சொத்து பிரச்சனைக்காக அவருடைய தந்தையும், சகோதரரும் சட்டவிரோதமாக சிறைபிடித்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டு தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவருடைய மனைவி புவனேஸ்வரி சென்னை ஐகோர்ட்டில் ஒரு ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வழக்கு விசாரணை

இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, நீதிபதி கார்த்திகேயன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே சங்கர் ராஜை கண்டுபிடிக்கக் கோரி அவருடைய தந்தை தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்கின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்றும் புவனேஸ்வரி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதே சமயம் காவல்துறை தரப்பில், சங்கர் ராஜை கண்டுபிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சங்கர் ராஜின் தந்தை தாக்கல் செய்த வழக்கில் ஐகோர்ட்டு கடந்த 2021-ல் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், காணாமல் போனவர் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க வேண்டும் என திருக்கோவிலூர் டி.எஸ்.பி.க்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது என்ற விவரம் நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

தொழில்நுட்பம்

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பல்வேறு மாநிலங்களில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அந்தந்த மாநில காவல்துறையினர் பயன்படுத்தி வரக்கூடிய சூழலில், தமிழகத்தில் அதுபோன்ற தொழில்நுட்பம் எதுவும் பயன்படுத்தப்படுவதாக தெரியவில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

டி.ஜி.பி. பதிலளிக்க உத்தரவு

ஆட்கொணர்வு வழக்குகளில் நீதிமன்றங்கள் அவ்வப்போது பிறப்பிக்கக் கூடிய உத்தரவுகள் மீது தீவிரமான விசாரணை எதுவும் நடத்தப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்த நீதிபதிகள், சங்கர் ராஜை கண்டுபிடிக்க எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி திருக்கோவிலூர் டி.எஸ்.பி.க்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்ததுடன், தமிழகம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளது? நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த போலீசார் என்னென்ன முயற்சிகள் எடுத்துள்ளனர்? என்பது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக டி.ஜி.பி.க்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அது மட்டுமின்றி, மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்கள் தொடர்பாக நிலுவையில் இருக்கக்கூடிய வழக்குகளின் புலன் விசாரணையை விரைவுபடுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பதையும் டி.ஜி.பி. தன்னுடைய அறிக்கையில் விளக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

X