தமிழ்நாட்டில் வெளிமாநில தொழிலாளர்கள் எத்தனை பேர்?

வந்தாரை வாழ வைக்கும் பூமியாக தமிழ்நாடு மாறிவிட்டது.
தமிழ்நாட்டில் இப்போது நகரங்களுக்கு மட்டுமல்ல குக்கிராமங்களுக்கு சென்றாலும் வடமாநில தொழிலாளர்களை பரவலாக பார்க்க முடிகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே வடமாநிலங்களில் இருந்து குறிப்பாக பீகார், அசாம், மேற்கு வங்காளம், ஒடிசா மட்டுமல்லாமல் மேலும் பல மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் ஒரு பையை மட்டும் தூக்கிக்கொண்டு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்து இறங்குவதை பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே வந்து வேலை பார்க்கும் வெளிமாநிலத்தவர்களும் அவர்களது சொந்த ஊரில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரையும் தமிழ்நாட்டுக்கு வாருங்கள், பிழைத்துக்கொள்ளலாம், ஏதாவது வேலை நிச்சயமாக கிடைக்கும் என்று கூறி அழைத்து வருகிறார்கள்.
எனவே வந்தாரை வாழ வைக்கும் பூமியாக தமிழ்நாடு மாறிவிட்டது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை நம்பி வருகிறவர்கள் குறிப்பிட்ட வேலையென்று இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். ஆரம்பத்தில் கட்டிட வேலை மட்டும் செய்தவர்கள், இப்போது ஓட்டல் வேலைகள், அலுவலகங்களில் கடை நிலை பணிகள், டிரைவர்கள் என்று மட்டுமல்லாமல் இஸ்திரி போடும் தொழில், முடிதிருத்துவது, செங்கல் சூளைகள், காகித ஆலைகள், நூற்பாலைகள், அரிசி ஆலைகள், மெக்கானிக் ஷாப்புகள், டீக்கடைகள் என்று நுழைந்து, இப்போது விவசாய வேலைகளிலும் ஏன் பழனி பகுதியில் தென்னை மரம் ஏறும் தொழிலிலும் கூட வட மாநில தொழிலாளர்கள் இறங்கிவிட்டனர். அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ளவர்களும் மிகவும் விருப்பத்தோடு வேலை கொடுக்கிறார்கள்.
இதற்கு காரணம் தமிழ்நாட்டு தொழிலாளர்களை விட அவர்கள் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு அதிக நேரம் வேலை பார்ப்பதனால்தான். அவர்கள் வேலையும் நேர்த்தியாக இருக்கிறது என்பது வேலை கொடுப்பவர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆனால் இதுபோன்று வேலைக்காக வருகிறவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக பெருகிக்கொண்டு இருப்பதாலும், வருபவர்கள் தமிழ்நாட்டிலேயே நிரந்தரமாக தங்கிவிடுவதாலும் அவர்கள் வாக்குரிமையை பெறும் வாய்ப்பும் இருக்கிறது. சமீபத்தில் பீகாரில் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணியில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் இல்லை. இதில் 6 லட்சம் பேர் தமிழ்நாட்டுக்கு வந்து இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கிளப்பியுள்ளார்.
இந்த நிலையில் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? என்ற துல்லியமான விவரம் இல்லை. இதைத்தொடர்ந்து தமிழக தொழிலாளர் நலத்துறை வெளிமாநிலத்தவர்கள்-2025 என்ற கணக்கெடுப்பை விரைவில் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் தங்கள் பங்களிப்பை நல்கும் வெளிமாநிலத்தவர் தமிழக பொருளாதார வளர்ச்சியில் எவ்வாறு பங்காற்றுகிறார்கள்?. அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்? அவர்கள் யார் மூலம் தமிழ்நாட்டில் வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்கள்? என்பது பற்றிய விவரங்கள் தமிழக அரசிடம் இல்லை. எனவே இந்த விவரங்களுக்காக வெளிமாநில தொழிலாளர்கள் கணக்கெடுப்பை விரைவில் தொடங்க தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை இதற்கான ஒரு ஏஜென்சியை தேர்ந்தெடுக்க டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பை கட்டுமான தொழில் மற்றும் பிற துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள் என்று இருவகைப்படுத்தி 6 மாதங்களுக்குள் எடுத்து முடிக்கப்போகிறார்கள். தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு கணக்கெடுப்பு நடத்துவது இதுவே முதல் முறை என்ற வகையில் இது ஒரு நல்ல முடிவாகும்.






