பொது இடத்தை ஆக்கிரமித்து எத்தனை வழிபாட்டு தலங்கள் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தை ஆக்கிரமித்து எத்தனை வழிபாட்டு தலங்கள் உள்ளன? அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு அலுவலக வளாகத்தில் வழிபாட்டு தலங்கள் இருக்கக்கூடாது என்று 1968-ம் ஆண்டு தமிழக பொதுத்துறை (சட்டம் மற்றும் ஒழுங்கு) அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை வலியுறுத்தி 1994-ம் ஆண்டு ஒரு சுற்றறிக்கையையும் வெளியிட்டது.

ஆனால், இந்த அரசாணை மற்றும் சுற்றறிக்கைக்கு எதிராக, கோவை வருவாய் கோட்டாட்சியரின் அலுவலகத்தில் சட்டவிரோதமாக பிள்ளையார் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த கோவிலை அகற்றும்படி கோவை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

பொதுச்சாலை, நீர்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து ஏராளமான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. சில பேராசைக்காரர்கள், மாபியா கும்பல்கள் அரசு நிலங்களை அபகரிக்கவும், பணம் சம்பாதிக்கவும் பொது இடங்களில் கோவில்கள் கட்டுகின்றனர். அதனால், வாகன போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எந்த ஒரு அனுமதியையும் பெறாமல் சிலர் சாலையோரம் கோவில்களை கட்டுகின்றனர்.

இதுபோன்ற செயலை இந்து சமய அறநிலையத்துறை ஒருபோதும் ஊக்குவிக்கக்கூடாது. அது மத உணர்வுகளை தவறாக பயன்படுத்துவதாகிவிடும்.

பொதுஇடங்களை ஆக்கிரமிக்கும் செயலை ஒருபோதும் அனுமதிக்கவோ, ஆதரிக்கவோ கூடாது. தெய்வமாக இருந்தாலும், பொது இடங்களை ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. அவ்வாறு ஆக்கிரமித்தால், அந்த தெய்வத்தின் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக சட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடாது.

எனவே, பொதுசாலை, புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் உள்ள சட்டவிரோத கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நில அபகரிப்பாளர்கள், மாபியாக்கள் மூலமாக பொதுஇடங்களை ஆக்கிரமிக்க தெய்வமே வந்தாலும் கூட அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர், மாநில நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், ஆணையர் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறேன்.

இந்த அதிகாரிகள், தமிழகம் முழுவதும் பொது இடங்களையும், நீர்நிலைகளையும், பொதுசாலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் குறித்த புள்ளிவிவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கை 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com