

சென்னை,
திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., - தவெக எம்.எல்.ஏ., இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட நிலையில் விசிக எம்.பி., ரவிக்குமார் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
திருச்சியில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் குத்துவிளக்கு ஏற்றும்போது புரோட்டோக்கால் பின்பற்றாமல் செயல்படுவதாகக் கூறி காங்கிரஸ் எம்.பி. கிறஸ்டோபர் திலக்கிடமிருந்து மெழுகுவர்த்தியை பிடுங்கி வீசிய திருவெறும்பூர் தவெக எம்.எல்.ஏ.வால் விழா அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது.
விழாவில் குத்துவிளக்கு ஏற்றுவதற்கான நேரம் வந்தபோது, முதலில் யார் குத்துவிளக்கு ஏற்றுவது என்பதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, அங்கு இருந்த அமைச்சர் ரமேஷ் இருவரையும் சமாதானப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, நாவல்பட்டு விஜி குத்துவிளக்கு ஏற்றினார். ஆனால், கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனால், விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், திருச்சியில் குத்துவிளக்கு ஏற்றுவதில் காங்கிரஸ் எம்.பி., - தவெக எம்.எல்.ஏ., இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்ட நிலையில் விசிக எம்.பி., ரவிக்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
நாடாளுமன்ற உறுப்பினர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது ஒன்றிய அரசு மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கு உத்தரவுகளை அனுப்பி வந்துள்ளது. அவை எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12 ஆம் தேதியன்று ஒரு உத்தரவை அனைத்து மாநில/ யூனியன் பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பியுள்ளது. அதில் :
அரசு அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொது நிகழ்ச்சிகளுக்கு, அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.
Protocol படி இந்திய அரசின் செயலாளர்கள் தகுதிக்கு மேலாக உறுப்பினர்கள் இடம்பெறுவதைக் கருத்தில் கொண்டு, ( proper order of seating on the dais should be made for Members keeping in view the fact that they appear above officers of the rank of Secretaries to Government of India in the Warrant of Precedence; ) பொது நிகழ்ச்சிகளில் அவர்களுக்காக முறையான மற்றும் வசதியான இருக்கை ஏற்பாடுகளும், மேடையில் சரியான இருக்கை வரிசையும் செய்யப்பட வேண்டும்.
தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் ஊடக நிகழ்வுகளில், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள அத்தொகுதியின் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறலாம். ஏதேனும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி ஒன்றுக்கு மேற்பட்ட மாவட்டங்களில் பரவியிருந்தால், அவரது தொகுதியின் பகுதியாக உள்ள மாவட்டங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவறாமல் அழைக்கப்பட வேண்டும்.”
[அலுவலக எண் 11013/4/2011-Estt. (A) நாள் 01.12.2011-இன் பத்தி 5(v)]” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த உத்தரவை சரியாகப் பின்பற்றும்படி மரியாதைக்குரிய தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்களை அறிவுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட ஆட்சியர்களும் வருவாய்த்துறை மற்றும் பிற அலுவலர்களுக்கு இந்த உத்தரவைத் தெரியப்படுத்த வேண்டும். என அதில் பதிவிட்டுள்ளார்.