வேளாண் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி?

வேளாண் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி? என்பது குறித்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வேளாண் திட்டங்களுக்கு உழவன் செயலியில் முன்பதிவு செய்வது எப்படி?
Published on

உழவன் செயலி

வேளாண்மை உழவர் நலத்துறையில் பல்வேறு நல உதவி திட்டங்கள் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உழவன் செயலி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது ஆன்ட்ராய்டு செல்போனில் பிளே ஸ்டோர் அல்லது ஐ-போனில் ஆப் ஸ்டோர் மூலமாக உழவன் என உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் செய்த பிறகு விவசாயியின் பெயர், செல்போன் எண், மாவட்டம், வட்டாரம் மற்றும் கிராமம் உள்ளிட்ட தகவல்களை உள்ளீடு செய்து ஒருமுறை பதிவு செய்திட வேண்டும்.

திட்டங்களின் மானிய விவரம் மற்றும் விவசாயிகள் திட்டப்பலனை பெற தேவையான தகுதிகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள "மானியத் திட்டங்கள்" எனும் ஐகானை கிளிக் செய்து, துறை, திட்டம், வகை, வகுப்பு போன்றவை தேர்வு செய்து உள்ளீடு செய்து பின் தேடுக எனும் ஐகானை கிளிக் செய்திட வேண்டும். அதன் பின்பு, திட்ட இனம், அதற்கான மானிய விவரம், மானியம் பெற தேவையான தகுதிகள், விவசாயிகள் சமர்ப்பிக்கப்பட வேண்டி ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் செல்போன் திரையில் காண்பிக்கப்படும்.

இடுபொருள் முன்பதிவு

விவசாயிகள் தாங்கள் பெற தகுதியான திட்ட இனங்களை தெரிந்து கொண்ட பின்பு, "இடுபொருள் முன்பதிவு" எனும் ஐகானை கிளிக் செய்யவும். துறை, திட்டம், வகை, இனங்களை தேர்வு செய்த பின்பு, விவசாயிகள் தங்களது ஆதார் எண், விவசாயியின் பெயர், தந்தை/ மனைவி பெயர், செல்போன் எண், சமூக நிலை, நில உரிமையாளர்/ சாகுபடியாளர், பாலினம், புகைப்படம், முகவரி, நில விவரங்கள், வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து பதிவு செய்க எனும் ஐகானை கிளிக் செய்யவும். பதிவு செய்த விவரம் விவசாயிக்கு குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். பதிவு செய்யப்பட்ட விவரங்களை சரிபார்த்து பதிவு முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளால் கோரப்பட்ட இடுபொருள் மற்றும் திட்டப்பலனை பெற ஒப்புதல் வழங்கப்படும்.

அதன்பின்பு விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறையின் அலுவலகத்திற்கு சென்று இடுபொருட்கள்/ திட்டப்பலனை பெறலாம். மேலும், பயிற்சி அல்லது செயல் விளக்கங்களில் பங்கேற்கலாம். எனவே, இவ்வழிமுறைகளை கடைபிடித்து உழவன் செயலியினை விவசாயிகள் பதிவிறக்கம் செய்து வேளாண்மை-உழவர் நலத்துறை திட்டங்களை பதிவு செய்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com