ஓடும் ரெயிலில் செல்போன் தொலைந்தால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்? - தெற்கு ரெயில்வே தகவல்

செல்போன் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்கும்போது அதன் 15 இலக்க 'ஐ.எம்.இ.ஐ.' எண் விவரம் உள்ளிட வேண்டும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
ஓடும் ரெயிலில் செல்போன் தொலைந்தால் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்? - தெற்கு ரெயில்வே தகவல்
Published on

சென்னை,

ஓடும் ரெயில்களில் செல்போன் திருடுபோகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ரெயில் கதவின் அருகில் நின்று பேசுதல், ஜன்னல் அருகில் இருந்து செல்போனை பயன்படுத்துதல், சார்ஜ் போட்டுவிட்டு கவனிக்காமல் விடுதல் போன்ற செயல்கள் திருட்டுக்கு வழிவகுக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் நிகழும்போது பயணிகள் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து தெற்கு ரெயில்வே விளக்கம் அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

ஓடும் ரெயிலில் செல்போன் தொலைந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. செல்போனை தொலைத்தவர்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தால் 'ரெயில் மதாத்' செயலியை பதிவிறக்கம் செய்து புகார் தெரிவிக்கலாம். '139' என்ற எண்ணில் அல்லது 'சி.இ.ஐ.ஆர்.' இணையத ளத்தில் தங்கள் புகார்களை பதிவு செய்யலாம்.

இந்த புகார்கள் உடனடியாக ரெயில்வே பாதுகாப்பு படை சைபர் பிரிவிற்கு செல்லும். அவர்கள் தொலைந்த அல்லது திருடுபோன செல்போன் செயல்படாதவாறு (பிலாக்) முடக்குவார்கள். அதனைத்தொடர்ந்து, அந்த செல்போன் எந்த இடத்தில் இருக்கிறது? என்பதை கண்டறிந்து செல்போனை மீட்பார்கள்.

தொலைந்து போன செல்போன் குறித்து பயணிகள் புகார் தெரிவிக்கும்போது அதன் 15 இலக்க 'ஐ.எம்.இ.ஐ.' எண் விவரம் உள்ளிட வேண்டும். அதன் மூலம்தான் அந்த செல்போனை கண்டறிய முடியும். எனவே, ரெயில் பயணிகள் அனை வருமே தங்களில் செல்போனின் 'ஐ.எம்.இ.ஐ.' எண்ணை டைரி அல்லது வேறேதும் வழியில் ஞாபகம் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இதேபோல, ரெயிலில் தனியாக பயணம் செய்யும் பயணியின் செல்போன் காணாமல் போனால் உடனடியாக அங்கிருக்கும் டிக்கெட் பரிசோதகர், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அல்லது நம்பத்தகுந்த சக பயணிகள் உதவியோடு இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே சார்பில் சமூக வலைதள பக்கத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com