மழை நீரில் மூழ்கிய சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி?

மழை நீரில் மூழ்கிய சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி?
மழை நீரில் மூழ்கிய சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி?
Published on

மழை நீரில் மூழ்கிய சம்பா- தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி? என குடவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடிகால் வசதி

வடகிழக்கு பருவ மழை தொடங்கி மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக நெற்பயிர்கள் அவ்வப்போது மழை நீரில் மூழ்கும் நிலை உள்ளது.

மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு முதல் வழி வடிகால் வசதி அமைப்பு தான். உடனடியாக நீரினை வடிய வைத்து வேர் பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்க செய்யவேண்டும்.

சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டு இருந்தால், நாற்றங்காலில் மீதம் உள்ள நாற்றுகளை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். பயிர்கள் இல்லாத இடத்தில் தூர் வெடித்த பயிர்களை அகற்றி நடவு செய்து பயிர் எண்ணிக்கையை கூட்டலாம். மேலும் நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

இலை மடக்கு புழு

நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன், 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம்புண்ணாக்கு ஆகியவற்றை கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்த உடனே வயலில் இடவேண்டும்.

இலை மடக்கு புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். பாக்டீரியா இலைகருகல் நோயின் அறிகுறி தென்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோ மைசின் சல்பேட், டெட்ராசைக்கிளின் 120 கிராம், காப்பர் ஆக்சி குளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். இதனால் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com