கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது எப்படி?-தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு

கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை தேர்வு செய்வது எப்படி?-தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு
Published on

கலைஞர் மகளிர் உரிமை திட்டம்

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படவுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் சிறப்பு முகாம்களில் ஈடுபடவுள்ள தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு பெரம்பலூர் மாவட்டத்திற்கு பெரம்பலூர் முத்துநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கிறிஸ்டியன் கல்வி நிறுவனத்தில் கலெக்டர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

கலைஞர் மகளிர் உரிமை திட்ட சிறப்பு முகாம்களில் பயனாளிகளை தேர்வு செய்யும் விதி முறைகள், விண்ணப்பம் வினியோகம், விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து வாங்குதல், விண்ணப்பங்களில் சரியான தகவல்கள் இருப்பதை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து தன்னார்வலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. இதை போன்று தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்படும்.

விரல் ரேகை பதிவு

குடும்ப தலைவிகளிடம் பயோ மெட்ரிக் முறையில் எவ்வாறு விரல் ரேகை பதிவு செய்வது, அவர்களின் ஆதார் விவரங்களை எவ்வாறு கையாள்வது, இதற்காக தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள சிறப்பு மென்பொருள்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஒவ்வொருவருக்கும் விரிவாக பயிற்றுனர்களால் எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சி வகுப்பினை தன்னார்வலர்கள் முறையாக பயின்று மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் வகையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும், என்று கலெக்டர் தெரிவித்தார்.

2 கட்டங்களாக...

பெரம்பலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு வழங்கப்படும் மனுக்களை குடும்ப தலைவிகள் பூர்த்தி செய்து திரும்ப வழங்குவதற்கு மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளுக்கு அருகே உள்ள சமுதாய கூடங்கள், அரசு பள்ளிகள் என மொத்தம் 282 சிறப்பு முகாம்கள் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரையிலும், ஆகஸ்டு 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையிலும் என 2 கட்டங்களாக காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 12 இடங்களில் மொத்தம் 516 தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com