புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்களே நிதி சுமையை எப்படி சமாளிப்பீர்கள்? எடப்பாடி பழனிசாமி பதில்

மக்களுக்கு சேவை செய்வதும் அவர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையை கொடுப்பதும்தான் அரசின் கடமை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளீர்களே நிதி சுமையை எப்படி சமாளிப்பீர்கள்?   எடப்பாடி பழனிசாமி பதில்
Published on

சென்னை,

அதிமுக தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வெளியிட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். எம்ஜிஆர் மறைவிற்கு அம்மா அவர்கள் 28 ஆண்டுகள் அதிமுகவை கட்டி காத்து, 4 முறை சிறப்பான ஆட்சி தந்துள்ளார். அம்மா மறைவிற்குப் பின் இந்த இயக்கத்தை எதிரிகளும், துரோகிகள் அழிக்க முற்பட்டபோது, கோடானகோடி தொண்டர்கள் ஆதரவோடு ஆட்சியையும், இயக்கத்தையும் நிலைநிறுத்தி, தமிழக மக்களுக்கு சிறந்த ஆட்சி வழங்கப்பட்டது.

கொரோனா தொற்று காலத்தில் அரசிற்கு வருமானம் இல்லாத காலத்திலும் அம்மா அரசு, ஒருவர் கூட சிரமப்படக்கூடாது என்பதற்காக சிறப்பான திட்டங்களை தீட்டி, செயல்பட்டது. 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, குடிமராமத்துத் திட்டம், காவிரி டெல்டா பகுதி விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் திட்டம் போன்ற மக்கள் நலத்திட்டங்களை மிகச்சிறப்பாக செய்துள்ளோம்.

தீய சக்தி திமுக 2021 தேர்தலின் போது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்து, நான்கில் ஒரு பகுதியைக் கூட நிறைவேற்றவில்லை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த பிறகு மக்களை மறந்த அரசு திமுக அரசு. நிர்வாகத் திறனற்ற முதல்-அமைச்சர் ஸ்டாலின் ஐந்தாண்டு ஆண்டு கால ஆட்சியில் தமிழக மக்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறார்கள்.

கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் நடமாட்டம் விற்பனை, கடத்தல் போன்றவை அன்றாட நிகழ்வாக தமிழ்நாட்டில் இருக்கிறது. இன்றைய ஆட்சியில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் தான் வேகமாக துரிதமாக நடைபெறுகிறது. மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் திமுக அரசை ஆட்சியில் இருந்து அகற்ற, தமிழ்நாடு மக்கள் தயாராகி விட்டார்கள்.

எங்கள் இயக்கத்தின் தேர்தல் அறிக்கை குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சென்று அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களின் கோரிக்கையைக் கேட்டறிந்து. மதச்சார்பின்மை, மனிதநேயம், ஏழை எளியோர் மேம்பாடு, சமூகநீதி, சமத்துவம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, வேளாண் மற்றும் அதை சார்ந்த உபதொழில் வளர்ச்சி, தொழில்துறை மற்றும் சிறுதொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம், படித்த இளைஞர்களுக்கு தகுதியான வேலை வாய்ப்பு உருவாக்குதல் போன்ற அடிப்படை தேவைகள் நிறைவேற்றும் தேர்தல் அறிக்கையாக தயாரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மூன்று கட்டமாக நாங்கள் தேர்தல் அறிக்கை வெளியிட்டோம். எல்லா குடும்பத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு மாதம்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்தோம். மகளிர் தற்போது நகரப்பேருந்துகளில் இலவசமாக பயணிப்பது போல், அதிமுக ஆட்சிக்கு வந்த பின் ஆண்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம்.

ஏழை குடும்பங்களுக்கு தரமான வீடு கட்டித்தரப்படும். அம்மா இருசக்கர வாகனம் 5 லட்சம் பேருக்கு வழங்கப்படும், 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இளைஞர்கள், மாணவர்கள் வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

வாழ்வாதார உதவியாக ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர் விலையில்லாமல் வழங்கப்படும். தற்போது இல்லத்தரசிகளின் பளுவைக் குறைக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பிரிட்ஜ் வழங்கப்படும். விலையில்லா அரிசியுடன் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு விலையில்லாமல் வழங்கப்படும். மொத்தம் 297 தேர்தல் அறிவிப்புகள் கொடுத்திருக்கிறோம்...’’ என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

கேள்வி: தொகுதிப் பங்கீடு எப்போது முடியும்..?

இபிஎஸ் ; பேசிக்கொண்டே இருக்கிறோம். முடிந்துவிடும். எந்தெந்தக் கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும்.

கேள்வி : வேட்பாளர் பட்டியல் எப்போது வெளிவரும்…?

இபிஎஸ் : தொகுதி அறிவித்த பின்னர், வேட்பாளர்களை அறிவிப்போம்.

கேள்வி : நாளை பிரச்சாரம் தொடங்க உள்ளீர்களே….?

இபிஎஸ் : பிரச்சாரம் வேறு, வேட்பாளர் அறிவிப்பு வேறு. அது பாட்டுக்கும் அது நடக்கும், இது பாட்டிற்கு இது நடக்கும்.

கேள்வி: பிரச்சாரம் தொடங்க மைலாப்பூரை தேர்வு செய்தது ஏன்…

இபிஎஸ் : அது தானே பக்கத்தில் இருக்கிறது. நான் சேலத்தில் இருக்கும்போது அங்கு தேர்ந்தெடுத்து போனோம். இங்கு இருப்பதால் மைலாப்பூரில் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறோம்.

கேள்வி : ஏற்கனவே நிதி பற்றாக்குறை இருக்கும் போது தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவீர்கள்…?

இபிஎஸ் : நிதி ஆதாரத்தை சரியான முறையில் பெருக்குவோம். ஏற்கனவே கொரோனா காலத்தில் வருவாய் பற்றாக்குறை இருந்தபோது, எப்படி சமாளித்தோமா, அது போல் நிதி ஆதராத்தை பெருக்கி நாங்கள் அறிவித்த திட்டங்களை முறையாக செயல்படுத்துவோம்.

கேள்வி : ஒவ்வொரு தேர்தலின் போதும் திமுக தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது, அப்போது திமுக தேர்தல் அறிக்கை தான் கதாநாயகன் என்று சொல்கிறார்கள்…?.

இபிஎஸ் : இப்போது யார் கதாநாயகன்., அதிமுக தான்.

கேள்வி: அதை மாற்றக்கூடிய அளவிற்கு அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறதா…

இபிஎஸ் : மக்களுக்கு எது சரி, எந்த அறிவிப்பை கொடுத்தால் மக்களிடத்தில் போய் சேரும், அதனால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று தான் பார்க்க வேண்டும். திமுக 525 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். நான்கில் ஒரு பகுதியை தானே நிறைவேற்றி இருக்கிறார்கள். எஞ்சிய அறிவிப்புகளை இன்னும் நிறைவேற்றவில்லை.

கேள்வி: அதிமுக அறிவித்துள்ள திட்டங்கள் எல்லாமே நிறைவேற்றப்படும் என்று உறுதி கொடுக்கிறீர்களா…?

இபிஎஸ் : எங்களுடைய தலைவர்கள் ஏற்கனவே நிறைவேற்றி இருக்கிறார்கள். அவர்கள் வழியில் வரும் அம்மா அரசும் அறிவித்த அறிவிப்புகளை முழுமையாக நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கேள்வி : கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு நிறைவு செய்து விட்டீர்கள். வேறு கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா…?

இபிஎஸ் ; வாசன், ஐஜேக, பூவை ஜெகன்மூர்த்தி மற்றும் சில கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். இரண்டு நாட்களில் முடிந்து விடும். யாரும் புதிதாக வருவதாகத் தெரியவில்லை.

கேள்வி : புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வர வாய்ப்பு இருக்கிறதா….?

இபிஎஸ் ; அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம், ஆனால் பேச்சுவார்த்தை இறுதி பெறவில்லை.

கேள்வி : தொகுதி எண்ணிக்கை பிரச்சனை இருக்கிறதா…?

இபிஎஸ் : அப்படி கிடையாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. அதன் படி அவர்கள் கேட்பதும், நாங்கள் சொல்வதற்கும் சில வேறுபாடுகள் இருந்ததால், அப்படியே நின்று விட்டது.

கேள்வி: அனைத்து குடும்பத்திற்கு பிரிட்ஜ் வழங்குவதாக கூறியுள்ளீர்கள். நிதிப் பற்றாக்குறை இருக்கும்போது, அதை எப்படி நிறைவேற்றுவீர்கள்…?

இபிஎஸ் : நான் ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டேன். அதிமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் வருவாய் பற்றாக்குறை இருந்த போதும், சிறப்பான ஆட்சியைக் கொடுத்தோம். வருவாய் இல்லாத போதே சிறப்பான ஆட்சி கொடுத்தோம் என்பதால் வருவாய் இருக்கும்போது, இந்த திட்டங்களை எல்லாம் நிறைவேற்றோம்

கேள்வி : சிவகங்கையில் நெறியாளர் தாக்கப்பட்டுள்ளார். தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பதை எப்படி பார்க்கிறீர்கள்…?

இபிஎஸ் : இன்று மட்டுமல்ல, பல முறை செய்தியாளர்களை திமுக தாக்குவது நடந்து வருகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்திகளை சேகரிக்கும் போதும், படம் எடுக்கும்போதும் தடுத்து நிறுத்துவது சரியாக இருக்காது. திமுகவிற்கு இது கை வந்த கலை. நீங்கள் சப்போர்ட் செய்வதால் தான், அவர்கள் இந்த அடி அடிக்கிறார்கள். நான் பல முறை சொல்லிவிட்டேன். அதிமுக ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. பக்திரிகையாளர்களை மதிக்கிற இயக்கம், பாதுகாக்கிற இயக்கம் அதிமுக.

கேள்வி : .ராமதாஸ், சசிகலா கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இது உங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா…?

இபிஎஸ் : எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது.

கேள்வி : சென்னையில் 13 வயது பெண்ணை திமுக நிர்வாகி பலாத்காரம் செய்துள்ளார், இது போல் கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பலாத்காரம் என திமுக நிர்வாகிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களே…?.

இபிஎஸ் : இதை எல்லாம் கண்டித்துத் தான் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கொலை, கொள்ளை, திருட்டு வழிப்பறி நடக்காத நாளே இல்லை. இவற்றை தடுத்து நிறுத்த திராணி இல்லாத அரசு ஸ்டாலின் அரசு.

கேள்வி: திமுக கூட்டணியில் இழுபறி இருந்தாலும் அந்த கூட்டணியை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்களே….?

இபிஎஸ் : எங்கே கட்டுக்கோப்பாக இருக்கிறது..? 25 நாட்களாக செய்திகளில் அது தானே ஓடிக்கொண்டு இருக்கிறது.

கேள்வி : விசிகவிற்கு 2 தொகுதிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதே….?

இபிஎஸ் ; இப்படி பேசிப் பேசி அவர்களை உயர்த்திக்காட்டுகிறீர்கள். அதாவது உலகத்திற்கு தெரியும், விசிக தலைவர் எவ்வளவு மனம் நொந்து பேசினார். அதே போல் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மனவேதனயை வெளிப்படுத்தினார்கள். அதை எல்லாம் நீங்கள் டிவியில் தெளிவாகக் காட்டுங்கள்….நாங்கள் அப்படி அல்ல உணர்வுப்பூர்வமாகப் பேசினோம், வந்தோம் அறிவித்தோம். முழுமையான அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளி வரும்.

கேள்வி: 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவோம் என்கிறீர்கள். என்ன தேவை அதற்கு வந்தது….?

இபிஎஸ் : 7.5%க்கு பெரிய வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஏழை, நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர்களின் கனவு மருத்துவராக வேண்டும் என்பது தான். இப்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டால் பயன் அடைகிறார்கள். இது கிராமம் முதல் நகரம் வரை உள்ள மாணவர்களுக்கு கிடைக்கப்பெற்ற பாக்கியம். ஆகவே அதை 2.5 சதவீதம் உயர்த்த இருக்கிறோம்.

கேள்வி : சாத்தான்குளம் வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வந்துள்ளதே….

இபிஎஸ் : அதிமுகவை பொறுத்தவரை சட்டத்தின் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது தவறு செய்தவர்கள் அதற்குண்டான தண்டனையை பெறுகிறார்கள். இது நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு. எந்த இடத்தில் தவறு நடந்தாலும், அது தவறு தான். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

கேள்வி : குற்றச்சம்பவங்களுக்கு மது காரணம் என்று சொல்கிறீர்கள். உங்கள் தேர்தல் அறிக்கையில் மது ஒழிப்பு பற்றி சொல்லி இருக்கிறீர்களா….?

இபிஎஸ் : மதுக்கடைகளை படிப்படியாகக் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் கூறி இருக்கிறோம்.

கேள்வி : 50 ஆண்டு காலம் திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது. இப்போதும் இலவசம் கொடுக்கிற, வாங்குகிற நிலையில் தான் மக்கள் இருக்கிறார்களா….?

இபிஎஸ் ; எல்லா மக்களும் பணக்காரர்கள் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வது அரசின் கடமை. அதற்காக தான் மக்கள் அரசை தேர்ந்தெடுக்கிறார்கள், மக்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையை கொடுப்பது தான் அரசின் கடமை. அந்த அடிப்படையில் தான் கொடுக்கிறோம்

கேள்வி : மதவாத சக்திகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதால் தான் குறைவான தொகுதியில் போட்டியிடுகிறோம் என்று திருமா கூறி இருக்கிறாரே…?

இபிஎஸ் : திமுக ஏற்கனவே பாஜக கூட்டணியில் இருந்த கட்சி தானே. இதே விசிகவும்,அதே கூட்டணியில் இருந்தார்களே. இந்த பேச்சு எல்லாமே அரசியல் காழ்ப்புணர்ச்சி.

கேள்வி : மருத்துவப்படிப்பிற்கு மட்டும் இடஒதுக்கீடு உயர்த்தி அறிவித்து இருக்கிறீர்கள். மற்ற படிப்பிற்கும் அறிவிப்பீர்களா….?

இபிஎஸ் : மற்ற படிப்பிற்கு ஏற்கனவே அறிவித்திருக்கிறார்கள்.

கேள்வி : கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் 170தொகுதிக்குள் தான் போட்டியிடப் போகிறீர்கள். இது உங்களுக்கு பின்னடைவு இல்லையா…?

இபிஎஸ் : பின்னடைவு முன்னடைவு என்றெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் இப்படி என்றால் திமுகவின் நிலை என்ன…? சூழ்நிலைக்குத் தகுந்தவாறு தான் கூட்டணி அமைக்கப்படும். கூடுதல் குறைவு என்பதெல்லாம் ஒன்று இல்லை. திமுக தலைமையிலான கூட்டணியில் எத்தனை கட்சிகள் இருக்கின்றன. எல்லோருக்கும் தொகுதி கொடுத்துவிட்டால் அவர்கள் எத்தனை தொகுதியில் போட்டியிட முடியும்..?

கேள்வி : அதிமுகவில் சாதாரணமானவர்கள் போட்டியிடுவார்கள் என்பார்கள், இந்த முறை எந்த மாதிரி

வேட்பாளர்கள் அறிவிக்கபடுவார்கள்…? நாளைக்கு வேட்பாளர் அறிவிப்பு இருக்குமா..?

இபிஎஸ் : பொறுத்திருந்து பாருங்கள். நாங்கள் வேகமாக முன்னே சென்று கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com