

ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லியில் 28-வது ஜி.எஸ்.டி. கூட்டம் நடந்தது. இதுவரை 457 பொருட்களின் மீதான வரி குறைப்பு மற்றும் வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதில் 67 பொருட்கள் தமிழகம் முன்வைத்த கோரிக்கையாகும். இந்த கூட்டத்திலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
50-க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டது. மத்திய நிதி மந்திரி கமிட்டியின் அறிக்கையை பெற்று அடுத்த கூட்டத்தில் முடிவுகளை அறிவிப்போம் என்று கூறியுள்ளார். சிறு, குறு தொழில்கள் அனைத்தும் உற்பத்தி பாதித்து வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. வரிவிகிதங்கள் சரியாக இல்லாததால் அவற்றை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்டு ஒரு வாரத்துக்குள் இதுபற்றி ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அனுப்பினால் அதன் அடிப்படையில் ஆகஸ்டு 4-ந் தேதி நடைபெறும் சிறு, குறு தொழிலுக்கான கூட்டத்தில் சலுகைகள் வழங்குவது பற்றி முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டது.
சிறு வணிகர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் ரூ.20 லட்சம் வரை தொழில் செய்பவர்கள் ஜி.எஸ்.டி.யில் வரமாட்டார்கள். இணக்கமுறை ரூ.1 கோடி வரை தொழில் வர்த்தகம் செய்தால் 1 சதவீதம் வரி செலுத்த வேண்டும். வரி விகிதங்களில் மாற்றம் செய்ய வேண்டியிருந்தாலும் ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தான் முடிவு செய்யவேண்டிய நிலை உள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பற்றி பேசி விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கமல்ஹாசனின் கட்சி தொடங்கி 150 நாள் சாதனை என்னவென்றால் உயர்மட்ட குழு செயற்குழுவாக மாறியது தான். மற்றொன்று கட்டிப்பிடி வைத்தியம் தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு போய் இருக்கிறது.
தமிழகத்தில் நடக்கும் திட்டங்களை பிறமாநிலங்கள் காப்பி அடிக்கும் வகையில் உள்ளன. ஆனால் இவர் பிற மாநிலங்களில் நடக்கும் திட்டங்களை கொண்டுவருவதாக கூறுவதை ஏற்கமுடியாது. பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி.யில் கொண்டுவருவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இது மாநிலத்தின் வருவாய் சம்பந்தப்பட்டது.
ஜி.எஸ்.டி. கொண்டுவந்தபோது பெட்ரோல், டீசல், மதுபானங்கள் மாநில பட்டியலில் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா கூறினார். இதை எல்லா மாநிலங்களும் சரி என்று ஏற்றுக்கொண்டன. இதன்பின்னர் தான் ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேறியது.
18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் எதுவும் பேசமுடியாது. பொறுத்திருந்து பார்ப்போம். டி.டி.வி.தினகரன் ஆரம்பத்தில் இருந்தே மிரட்டல் தொனி தான். அதிகாரிகளை, அமைச்சர்களை, எம்.எல்.ஏ.க்களை பார்ப்பேன் என்று ஒரு மாதிரியாக மாறிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.