மெரினா கடற்கரையில் 3 இடங்களில் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிற்பங்கள்

மெரினா கடற்கரையில் 3 இடங்களில் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட அழகிய சிற்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், தலைமை செயலகம், விமான நிலையத்திலும் வைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் 3 இடங்களில் வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட பிரமாண்ட சிற்பங்கள்
Published on

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து, மறுசுழற்சி செய்யும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்குகளில் சிக்கிய வாகன கழிவுகள் மற்றும் புதுப்பேட்டை, பேசன்பிரிட்ஜ் ஆகிய இடங்களில் உள்ள மாநகராட்சி வாகனங்கள் பழுது நீக்கும் நிலையங்களில் உள்ள காலாவதியான வாகன கழிவுகளையும் பயனுள்ளதாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

அதன்படி, வாகன கழிவுகளில் மீன், நண்டு, ஜல்லிக்கட்டு காளை, மிருதங்கம், இறால், விவசாயி உள்பட 14 வகையான சிற்பங்களை வடிவமைக்க சென்னை மாநகராட்சியால் திட்டமிடப்பட்டு, அந்த பணிகள் திருவான்மியூரில் நடைபெற்றது. இந்தநிலையில், வாகன கழிவுகள் மூலம் வடிவமைக்கட்ட அந்த சிற்பங்களை சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்போது வைக்கப்பட்டு வருகிறது.

அழகான சிற்பங்கள்

அந்தவகையில் சென்னை மெரினா கடற்கரையில் புல் வெளிகளில் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட 3 அழகான பிரமாண்ட உலோக சிற்பங்கள் வைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர். மேலும், அந்த சிற்பங்கள் முன்பு செல்பி எடுத்து மகிழ்கின்றனர். இந்த உலோக சிற்பங்கள் மெரினாவில் அமைக்கும் பணி முழுமையாக முடியும் முன்பு, இவை பொதுமக்களிடைய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தநிலையில் நேற்று இந்த பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். அப்போது அவர், 14 வகையான சிற்பங்கள் தயாராக இருப்பதாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க முடிவெடுக்கப்பட்டு, தற்போது அந்த பணிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்தார்.

ரூ.29 லட்சம் செலவில்...

மெரினாவில் வைக்கப்பட்டது போல, தலைமை செயலகம், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில், இந்த உலோக சிற்பங்களை வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது என்றும், இந்த பணிகள் அனைத்து ரூ.29 லட்சம் செலவில் நடந்து வருவதாகவும் கமிஷனர் தெரிவித்தார். தொடர்ந்து இது போன்ற கண்களை கவரும் உலோக சிற்பங்களை வாகன கழிவுகளிலிருந்து இன்னும் அதிகமாக வடிவமைத்து, சென்னையில் உள்ள அனைத்து முக்கிய பகுதிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்றும், இதன் மூலம் சென்னை அழகுப்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com