

திண்டுக்கல்,
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், தங்கம்மாபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மலக்கழிவு இருந்ததாக கூறப்படும் பிளாஸ்டிக் கவரில் எச்சரிக்கை துண்டுச் சீட்டு ஒன்றும் எழுதி வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதோடு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்படக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இத்தகைய சம்பவங்கள் பள்ளி வளாகத்திலேயே நடைபெறுவது பிஞ்சு உள்ளங்கள் மத்தியில் நஞ்சை விதைப்பதற்கு சமமாகும். இந்தக் கொடூர சம்பவம் குறித்து கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி அவர்கள் சம்பவம் அறிந்தவுடனேயே மாவட்ட ஆட்சித் தலைவரிடமும், மாவட்ட காவல்துறை அதிகாரியிடமும் பேசி, தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டுமென கூறியிருக்கிறார்.
இதுபோன்ற சமூகவிரோத செயல்களில் எந்தவித சமரசமோ, தயவு தாட்சண்யமோ காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரியிருக்கிறார். மாணவர்கள் படிக்கின்ற பள்ளி வளாகத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதை சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற நாட்டில் அனுமதிக்கவே முடியாது. இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.