

திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விஷமிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் அருகே தங்கம்மாபட்டியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் மாடியில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக சின்டெக்ஸ் குடிநீர் தொட்டி உள்ளது. நேற்று மதியம் மாணவர்கள் தற்செயலாக மாடிக்கு சென்றுள்ளனர். அப்போது குடிநீர் தொட்டியின் மேல் பகுதியில் எச்சரிக்கை என்ற தலைப்பில் ஒரு துண்டு சீட்டு ஒட்டப்பட்டு இருந்தது.
அதில், 'என் குடியை கெடுத்தால் பள்ளிக்கூடத்தில் அத்தனை பிள்ளைகளின் குடியை எல்லாம் கெடுத்துவிடுவேன். சும்மாவிடமாட்டேன். பள்ளி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை கம்யூனிஸ்ட் காலீஸ்' என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மாணவர்கள் குடிநீர் தொட்டிக்குள் எட்டி பார்த்தனர். அப்போது. தொட்டிக்குள் பிளாஸ்டிக் கவரில் மனித கழிவு வைக்கப்பட்டு அது குடிநீரில் கலந்து இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் பள்ளியின் தலைமையாசிரியை சந்திரபிரபா வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிதிக்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்து குடிநீர் தொட்டியை பார்வையிட்டனர். மேலும், போலீசார் அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் குடிநீர் தொட்டியை மோப்பம் பிடித்தப்படி சிறிது தூரம் ஓடி சென்று படுத்துக்கொண்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு குடிநீர் தொட்டியில் பதிவாகி இருந்த கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. மேலும் தொட்டியில் இருந்த குடிநீர் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் செயலில் ஈடுபட்ட விஷமிகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.