பழவேற்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பு: மீனவர்கள் அச்சம்

மர்மமான முறையில் ஆமைகள் உயிரிழந்திருக்கும் நிலையில், பதப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பழவேற்காடு பகுதியில் நூற்றுக்கணக்கான ஆமைகள் இறப்பு: மீனவர்கள் அச்சம்
Published on

சென்னை,

பழவேற்காடில் 4 நாட்களில் 100க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளால் தொடரும் சம்பவங்கள் குறித்து வனத்துறை மற்றும் கால்நடை துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஆழ்கடலில் வசிக்கும் ஆலிவ் ரிட்லி எனப்படும் கடல் ஆமைகள், ஆண்டுதோறும் டிசம்பர் - ஏப்ரல் மாதங்களில் கடற்கரை பகுதிகளுக்கு வந்து முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும். இந்த வகை ஆமைகள், இந்திய வன உயிரின சட்டம் 1972-ம் ஆண்டு கீழ் பாதுகாக்கப்படும் உயிரிரனமாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், பழவேற்காடு கடற்கரை பகுதியில், 'ஆலிவ் ரிட்லி' வகை கடல் ஆமைகள், முட்டையிட்டு செல்வது வழக்கம். இரவு நேரங்களில் வனத்துறையினர் கடற்கரை பகுதிகளில், கடல் ஆமைகள் இட்டு செல்லும் முட்டைகளை சேகரித்து, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பொரிப்பகங்களில் வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்த பின் கடலில் விடுகின்றனர்.

கடந்தாண்டு, 14,000 முட்டைகளை சேகரித்து, அதிலிருந்து, 13,217 ஆமை குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டனர். அதே சமயம், கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், 50க்கும் மேற்பட்ட 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.

கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசால், ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது தெரியவந்தது.

கடந்தாண்டை போல், நடப்பாண்டும் பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் அவ்வப்போது ஒன்றிரண்டு கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வந்தன. கடந்த டிசம்பர், ஜனவரி மாதங்களில், 30க்கும் மேற்பட்டவை இறந்தன.

இந்நிலையில், நான்கு நாட்களில், 100க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்த நிலையில் பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி உள்ளன. இது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழவேற்காடு லைட் ஹவுஸ் குப்பம், கூனங்குப்பம், முகத்துவாரம் என, பல்வேறு பகுதிகளில் கடல் ஆமைகள் குவியல் குவியலாக இறந்து கிடக்கின்றன. தினமும் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவது, மீனவ கிராமங்களிலும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்புகளால் கடல் ஆமைகள் இறப்பது அதிகரித்து வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com