குடும்ப தகராறு: சுவரில் தலையை மோதி மனைவி கொலை - கணவர் கைது

போலீஸ் விசாரணையில் மனைவியை அடித்து கொலை செய்ததை கணவர் ஒப்புக் கொண்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

நீலகிரி,

கூடலூரில், குடும்ப தகராறில் மனைவியின் தலையை சுவரில் மோத வைத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

கூலித்தொழிலாளி

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கோடமூலா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் குட்டன். இவரது மனைவி கீதா (36 வயது). இவர்களுக்கு 10 வயதில் மகன் உள்ளார். குட்டன், கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் வேலைக்கு சென்று விட்டு தனது நண்பருடன் அமர்ந்து மது குடித்தார். பின்னர் குடிபோதையில் நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து மீண்டும் மது அருந்தினார்.

குடும்ப தகராறு

அப்போது மீன் குழம்பு சமைத்து அவர்களுக்கு கீதா சாப்பாடு வழங்கினார். இந்த சமயத்தில் குட்டனுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் குட்டனின் நண்பர் அங்கிருந்து சென்று விட்டார். மேலும் கணவன்-மனைவி இடையே தகராறு முற்றியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த குட்டன், கீதாவின் தலையை பிடித்து சுவரில் பலமுறை மோத வைத்து அடித்துள்ளார்.

அடித்து கொலை

இதில் கீதாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். மேலும் குடிபோதையில் இருந்த குட்டன் படுத்து தூங்கினார். நேற்று காலையில் எழுந்து பார்த்தபோது, கீதா உயிரிழந்து கிடப்பதை கண்டார். தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் கூடலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குட்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குடும்ப தகராறில் மனைவியை அடித்து கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து குட்டனை போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com