

தூத்துக்குடி,
தூத்துக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் ரேவதி (வயது 24). இவரும் தூத்துக்குடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த சுரேஷ்குமார்(25) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஓராண்டாக இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ரேவதி தனது 10 மாதக் குழந்தையுடன் சங்கராபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில், சுரேஷ்குமார் ஒரு பாட்டிலில் பெட்ரோலுடன் ரேவதியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு ரேவதி, அவரது தாயார் மற்றும் 10 மாதக் குழந்தை ஆகியோரின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார்.
சாமர்த்தியமாகச் செயல்பட்ட ரேவதியும் அவரது தாயாரும், உடனடியாக வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு, குழந்தையுடன் பின்புற வாசல் வழியாக வெளியேறி உயிர் தப்பினர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
வாகனங்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை முயற்சியில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவியையும் குழந்தையையும் உயிரோடு எரிக்க முயன்ற இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.