ஆபாச படம் எடுத்து மிரட்டி மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர்

அஞ்சுவின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் பறித்து கொண்டு நீ இனிமேல் வேலை செய்து பிழைக்கக்கூடாது என கணவர் கொடுமை செய்துள்ளார்.
மனைவி மீது கொடூர தாக்குதல்
Published on: 

கொல்லம்,

மனைவியை ஆபாச படம் எடுத்து கணவர் கொடூரமாக தாக்கியுள்ளார்.

மனைவிக்கு கொடுமை

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள நீண்டக்கரா பகுதியைச் சேர்ந்தவர் நந்து (வயது 27). இவர் சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி நந்துவுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சுவுக்கும் (வயது 24) திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது அஞ்சுவின் பெற்றோர் 25 சவரன் நகையும் 5 லட்சம் ரொக்க பணமும் கொடுத்துள்ளனர்.

ஆனால் திருமணம் முடிந்த பிறகு அஞ்சுவின் பெற்றோரிடம் நந்துவும் அவரது பெற்றோரும் கூடுதல் வரதட்சணை கேட்டு மிரட்டி வந்துள்ளனர். திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் நந்து சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். வீட்டில் இருந்த நந்துவின் பெற்றோர் அஞ்சுவிடம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து கொடுமை செய்து வந்துள்ளனர். இதனால் அஞ்சு கொல்லத்தில் உள்ள தனது தாயாரின் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், கணவர் சமாதானப்படுத்தி அவரை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், இருவரும் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளனர்.

சவுதி அரேபியாவுக்கு சென்ற சில நாட்களில் நந்து மனைவி மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார். குக்கர், பெல்ட், சார்ஜர் ஆகியவற்றை கொண்டு அஞ்சுவை கொடூரமாக தாக்கியுள்ளார். அஞ்சுவின் கல்வி சான்றிதழ்கள் அனைத்தையும் பறித்து கொண்டு நீ இனிமேல் வேலை செய்து பிழைக்கக்கூடாது என்று கூறி கொடுமை செய்துள்ளார். மேலும், அவரை ஆபாசமாக படம் எடுத்து வீட்டிற்கு செல்ல முயன்றால் இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

பெரும் போராட்டத்திற்கு பிறகு அஞ்சு சவுதியில் இருந்து தப்பி கேரளா வந்துவிட்டார். பின்னர், அவரது தாயார் காயத்துடன் இருந்த மகளை சிகிச்சைக்காக கொல்லம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து அஞ்சு கொல்லத்தில் உள்ள சவரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அஞ்சுவின் கணவர் நந்து, மாமனார் தினேஷ் மற்றும் மாமியார் ஜெகதம்பா ஆகிய மூவர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சவுதி அரேபியால் இருக்கும் குற்றவாளி நந்துவை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com