

தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு, நேருஜி நகரைச் சேர்ந்த ஜெயராம் (67) என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராம் உப்பளத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் தனது மகன் பிரபாகரனுடன் வசித்து வந்தார். இவரது மனைவி விஜயகுமாரி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் உயிரிழந்திருந்தார். மனைவியின் மறைவுக்குப் பிறகு ஜெயராம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் மாடிக்குச் சென்று தூங்குவதாகக் கூறிவிட்டு சென்ற ஜெயராமை, மாலை நேரத்தில் அவரது மகன் பார்த்தபோது, மாடியில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் சீட் பொருத்தப்பட்ட இரும்புக் கம்பியில் நார் கயிற்றால் தூக்கிட்டு கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவரை மீட்டபோதும், ஜெயராம் ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ஜெயராமின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.