பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்.. கோவிலுக்கு சென்று திரும்பிய மனைவி அதிர்ச்சி..

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் பகுதியில் குடிபோதையில் இருந்த ஒருவர், தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.
உயிரிழப்பு.
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து வீட்டின் கதவைப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்திருந்த கணவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடும்ப பிரச்சினை

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் வட்டத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் (வயது 54). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 3 மகன்களும், 1 மகளும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று மாலை நேரம் குடிபோதையில் இருந்த ஜெயசங்கர் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்

பின்னர் வீட்டின் கதவை உட்புறமாகப் பூட்டிக்கொண்டு உள்ளே சென்று படுத்துக் கொண்டார். அப்பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்ததால், ஜெயசங்கரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவிலுக்குச் சென்றுவிட்டனர். பின்னர் இரவு 8 மணியளவில் வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டப்பட்டிருந்தது.

பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த கணவன்

நீண்ட நேரம் தட்டியும் கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மூத்த மகன் ஜெயபாரத் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ஜெயசங்கர் பாயில் சலனமற்று இறந்த நிலையில் படுத்துக் கிடப்பத்தைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதியம்புத்தூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெஸ்லின், ஜெயசங்கரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com