மனைவியின் கண்முன்னே கணவர் வெட்டி படுகொலை

காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வீடு திரும்பிய போது வீரபத்ரன் பைக் மீது கார் ஒன்று மோதியது.
மனைவி கண்முன்னே கணவர் வெட்டி கொலை
Published on: 

திண்டுக்கல்,

மனைவியின் கண்முன்னே கணவரை வெட்டி படுகொலை செய்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

நிபந்தனை ஜாமீன்

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் வீரபத்ரன். இவர் திமுக பிரமுகர் முருகன் என்பவரை காரில் கடத்தி நத்தம் அருகே கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர் திண்டுக்கல் சாணார்ப்பட்டி காவல் நிலையத்திற்கு கையெழுத்து போட்டு விட்டு வருவதாக இருந்தது.

படுகொலை

இந்த நிலையில் வழக்கம் போல் இன்று காவல் நிலையம் செல்வதற்காக மனைவி மாரியம்மாளுடன் சென்றுள்ளார். காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வீடு திரும்பியபோது நொச்சி ஓடைப்பட்டி அருகே வீரபத்ரனின் பைக் மீது கார் ஒன்று மோதியது. இதில் நிலைதடுமாறி மனைவியுடன் சாலையில் கீழே விழுந்தார். காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் மனைவியின் கண்முன்னே வீரபத்ரனை கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பின் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்த வீரபத்ரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த மனைவி மாரியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலை செய்யப்பட்ட வீரபத்ரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். புறநகர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மஞ்சிமா தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பழிக்குப் பழியாக கொலை நடந்ததா? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com