நடத்தையில் சந்தேகம்: தலையில் அம்மிக்கல்லை போட்டு இளம்பெண் கொலை - கணவன் வெறிச்செயல்

தொழிலாளி ரத்தக்கறையுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது மனைவியை கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

திருப்பூர்,

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு, கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.

தனிமையில் செல்போனில் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம், வடுகபாளையத்தை சேர்ந்தவர் கிறிஸ்துராஜா (31 வயது). பிரிண்டிங் நிறுவன தொழிலாளி. இவர் தனது மனைவி ஆக்னேஸ் பவலி (26 வயது) மற்றும் மகன், மகளுடன் திருப்பூர் வீரபாண்டி திருக்குமரன் நகரில் வசித்து வருகிறார். ஆக்னேஸ் பவலி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

அவர், அடிக்கடி தனியாக சென்று செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதை கவனித்த கிறிஸ்துராஜா, எதற்காக அடிக்கடி தனிமையில் சென்று செல்போனில் பேசுகிறாய்? யாருடன் பேசுகிறாய்? என்று கேட்டுள்ளார்.

நடத்தையில் சந்தேகம்

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் ஆக்னேஸ் பவலியின் நடத்தையில் கிறிஸ்துராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன்பு, தனது மனைவி அடிக்கடி தனிமையில் சென்று, யாருடனோ? செல்போனில் பேசுகிறார் என கே.வி.ஆர். நகர் அனைத்து மகளிர் போலீசில் கிறிஸ்துராஜா புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் ஆக்னேஸ் பவலியை நேரில் அழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.

அம்மிக்கல்லை போட்டு கொலை

ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்னேஸ் பவலி மீண்டும் அடிக்கடி செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்தார். நேற்று முன்தினம் இரவு, கிறிஸ்துராஜாவின் மகன், மகள் வீட்டில் உள்ள ஓர் அறையில் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஆக்னேஸ் பவலி செல்போனில் நீண்ட நேரம் பேசியதாக தெரிகிறது. இதுகுறித்து கிறிஸ்துராஜா, ஆக்னேஸ் பவலியிடம் கேட்டு உள்ளார்.

இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கிறிஸ்துராஜா, வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை தூக்கி மனைவியின் தலையில் போட்டதாக தெரிகிறது. இதில், ஆக்னேஸ் பவலி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்

இதைத்தொடர்ந்து கிறிஸ்துராஜா ரத்தக்கறையுடன், வீரபாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டதாக கூறி சரண் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிறிஸ்துராஜாவை கைது செய்தனர். தாயை இழந்ததோடு, தந்தையும் சிறையில் உள்ளதால், 2 குழந்தைகளும் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். அவர்களை உறவினர்கள் அழைத்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com