மாமனார் பாலியல் தொல்லை: அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது

முன்னதாக இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் அளித்திருந்தார்.
மாமனார் பாலியல் தொல்லை: அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம்பெண் தற்கொலையில் கணவர், மாமியார் கைது
Published on

கமுதி,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள ஒரு ஊரை சேர்ந்தவர், 32 வயது பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்த பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பெண்ணின் 65 வயதான மாமனார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது மருமகளான அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இதுகுறித்து தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்த மாமனார் வெளியூருக்கு தப்பி சென்றாராம். தன் தந்தை ஊரில் இருந்து வந்த உடன் கண்டிப்பதாக அவருடைய கணவர் கூறி இருக்கிறார். இதனால் மனவருத்தம் அடைந்த இளம்பெண் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். தீ மளமளவென பரவியதால் அலறினார்.

அவரை குடும்பத்தினர், காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர் உடல் கருகி பலத்த காயம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்ணின் மாமனாரை தற்போது வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தாயை இழந்து 2 குழந்தைகள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக அந்த இளம்பெண் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தபோது மரண வாக்குமூலம் அளித்திருந்தார். அதில் தனக்கு மாமனார் அளித்த பாலியல் தொல்லை குறித்து போலீசாரிடம் கூறி இருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் முனீஸ்வரன், மாமியார் சூரம்மாள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com