அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் - மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் 3 வது மற்றும் கடைசி நாள் கூட்டமானது சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளனர் என்றும், அம்மா உணவகம் முன்னோடி திட்டமாக உள்ளநிலையில் அதை மூடினால் என்ன என்று அமைச்சர் துரைமுருகன் பேசியது வேதனை அளிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்று காலை தொடங்கிய பேரவை கூட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கூட்டுறவு சங்கங்கள் தேர்தலை ரத்து செய்வதற்கான மசோதாவை பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்தார். இதனைத்தொடர்ந்து சட்டசபையில் கூட்டுறவு சங்கங்கள் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. வெளிநடப்பு செய்தது.

இதனையடுத்து, சட்டசபையில் சென்னை மாநகர காவல் சட்ட முன்வடிவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அதன்பின்னர், சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்தார்.

அப்போது பேசிய அவர், கவர்னர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும், அரசு சார்பிலும் மனமார்ந்த நன்றி. கடந்த கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்த 75% திட்டங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக எல்லா உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பளிக்க இயலவில்லை.

நீட் தேர்வு விலக்குக்கு ஆதரவளிக்கும் அ.தி.மு.க.விற்கு நன்றி. தமிழகத்தில் எந்த அம்மா உணவகமும் மூடப்படக்கூடாது என்பது தான் என்னுடைய எண்ணம். ஜெயலலிதா நினைவிடம் பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகம் மூடப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன். எனவே, அம்மா உணவகம் மூடப்படாது என்பதை எதிர்க்கட்சி தலைவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளி பாடத்திட்டத்தில் கருணாநிதியின் செம்மொழி பாடலை காகிதம் ஒட்டி மறைத்தது யார்?.. அதிமுக ஆட்சியில் முந்தைய தி.மு.க. அரசின் திட்டங்கள் புறக்கணிப்பட்டது போன்று, திமுக அரசு செயல்படாது.

திண்டுக்கல், தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் போக்சோ நீதிமன்றங்கள் அமைக்கப்படுகின்றன.

தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட 1.62 லட்சம் ஹெக்டேர் பயிர் பாதிப்பிற்கு ரூ.132.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இரண்டொரு நாட்களில் வரவு வைக்கப்படும். மத்திய அரசிடமிருந்து பேரிடர் மேலாண்மை நிதி வரவில்லை என்றாலும், விவசாயிகளின் நலன் காக்கும் இந்த அரசு, மாநில அரசின் நிதியிலிருந்து வழங்கும்

தமிழகத்தில் இதுவரை 8.76 கோடி கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் கொரோனா தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை 5 மாதங்களில் நிறைவேற்றியுள்ளோம். மக்களிடையே திமுக அரசு மீது அவ நம்பிக்கை ஏற்படவில்லை. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் செயல்படுத்தப்படும். இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் இதுவரை 5,274 பேர் பயன்பெற்றுள்ளனர் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com