அண்ணா பற்றி பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்... அண்ணாமலை திட்டவட்டம்

அண்ணா பற்றி பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அண்ணா பற்றி பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்... அண்ணாமலை திட்டவட்டம்
Published on

கோவை,

கோவை விமான நிலையத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக ஆட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டுள்ளது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 50 ஆண்டுகளாக தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவில்லை.

அதிமுக - பாஜக இடையே பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. அதிமுக தலைவர்கள் மற்றும் அண்ணாமலை இடையே பிரச்சினை இருப்பதாக நினைக்கிறேன். மோடி பிரதமராக வேண்டும் என்பதை அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். பிரதமர் மோடியை ஆதரிப்பவர்களை நானும் ஆதரிப்பேன்; இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

எனது அரசியலில் நான் தெளிவாக இருக்கிறேன்; தன்மானமே எனக்கு முக்கியம். எனக்கு யாருடனும் பிரச்சினை இல்லை. யாரையும் நான் தவறாக பேசவில்லை. கூட்டணி தொடர்பாக அதிமுக பேசிய கருத்துக்கு நான் பதிலளிக்க முடியாது.

அண்ணா பற்றி நான் பேசிய கருத்து சரியானது தான்; அதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். நான் பேசியதில் தவறே இல்லை. வரலாறு ரீதியாக நடந்த விஷயத்தை பேசினேன். அண்ணா குறித்த செய்திக்கு மறுப்பு தெரிவித்த தனியார் செய்தி குழுமம் கூறியதை நான் ஏற்க மாட்டேன். அண்ணா குறித்து வந்த செய்திகள், வரலாறுகளை நான் வெளியிடத் தயாராக இருக்கிறேன்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் என்பதற்காக தான் நான் தலைவராக உள்ளேன். என்னுடைய கொள்கைகளை எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். கூட்டணியின் மையப்புள்ளி பிரதமர் மோடி. மதுவிலக்கு கொள்கை என்றால், அதற்கு உதாரணம் அறிஞர் அண்ணா தான். மதுக்கடைகளுக்கு கையெழுத்து போட முடியாது என்பதில் உறுதியாக இருந்தவர் அண்ணா. தேசிய கட்சிகளுக்கு என்று மாநிலத்தில் சில தனி நிலைப்பாடுகள் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com