வரி உயரும் என்று கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

“தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்றும், வரி உயரும் என்று யாராவது கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல” என்று நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
வரி உயரும் என்று கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
Published on

பொருளாதாரம்

மதுரை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி வருமாறு:-

தமிழக அரசின் நிதி நிலைமை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதை தேர்தல் வாக்குறுதியில் இருந்து பின் வாங்குவதற்கு வெளியிடவில்லை. பொதுவாக வரியை உயர்த்தியே ஆக வேண்டும். எங்கிருந்தோ பணம் வரவில்லை என்பதால்தான் திவால் ஆகிறது. ஆனால் அதற்காக இன்றோ, நாளையோ வரி உயர்வு இருக்கும் என்று யாராவது கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. முன்னாள் அமைச்சர் மாபா.பாண்டியராஜனுக்கு பொருளாதாரம் தெரியாது. தேவையில்லாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் அவர் பேசுகிறார்.பொருளாதாரத்தில் உயர்ந்த மாநிலம் தமிழகம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த முன்னேற்றத்திற்கு நீதி கட்சியே காரணம். இந்த அரசாங்கத்தின் நோக்கம் வெளிப்படை தன்மை.தமிழகத்தின் நிதி சூழ்நிலை குறித்து மக்களுக்கு புரிய வேண்டும். எனக்கே இன்னும் சில விஷயங்கள் புரியவில்லை. கடந்த கால ஆட்சியில் 110-வது விதியின் கீழ் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்கள். அதில் எத்தனை செயல்படுத்தி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும்.

வெளிப்படை நிர்வாகம்

அரசின் நிதி கணக்கும், திருத்திய மதிப்பீட்டிற்கும் அதிக வித்தியாசம் உள்ளது. இது ஏன் என்பது தெரியவில்லை. இன்னும் இது குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து துறைகளும் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் எங்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அதன்படி உங்கள் துறையின் முழுமையான தகவல்களை திரட்டி கொள்ளுங்கள். அதனை மக்களிடம் கொண்டு போய் சொல்லுங்கள். அது தொடர்பான விவாதம் நடக்கட்டும். அதில் இருந்து மக்கள் கருத்துகளை பெற வேண்டும்.பின்னர் நிபுணர்களின் கருத்தை கேட்டு, மக்கள் ஆலோசனையின் பேரில் அரசு செயல்பட வேண்டும். எனவே வெளிப்படை நிர்வாகத்திற்காக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com