‘நான் தலைவன் அல்ல, மக்களின் சேவகன்’ கமல்ஹாசன் பேச்சு

“நான் தலைவன் அல்ல; மக்களின் சேவகன்” என்று கமல்ஹாசன் கூறினார்.
‘நான் தலைவன் அல்ல, மக்களின் சேவகன்’ கமல்ஹாசன் பேச்சு
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

சாதி, மதம், பேதம் எங்களுக்கு கிடையாது. எங்களுக்கு அன்பு, பாசம், நேசம் மட்டும்தான் காட்ட தெரியும். நான் ஒரு நடிகன். ஆனால் சிலர் நேர்மையானவர்கள் போல் நடிக்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை ஏமாற்றுகிறார்கள். தவறு, திருட்டு செய்தவர்களின் நடிப்பை கண்டு நம்பிவிடாதீர்கள். குடிநீர் ஒரு குடம் ரூ.10-க்கு விற்கப்படுகிறது. குடிநீர் வசதி செய்து கொடுக்காதவர்கள் ஓட்டு கேட்டு வருகிறார்கள். நான் யாரையும் விமர்சனம் செய்யவில்லை. மக்களின் அவலநிலையை எடுத்து சொல்கிறேன்.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர் கூட இல்லாமல் மக்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள். இதற்கு தீர்வு ஏற்படவேண்டும். அதற்காக ஒரு மாற்றத்தை உருவாக்க மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மக்கள் நினைத்தால் மாற்றம் வந்தே தீரும். என்னை 4 வயதிலிருந்து போற்றி பாதுகாத்தவர்களுக்காக உழைக்க வந்திருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய நான் கடன்பட்டவனாக உள்ளேன்.

ஓட்டுக்காக ரூ.5,000, ரூ.1,000 கொடுப்பதாக செய்தி வருகிறது. கோடி கோடியாய் மக்கள் பணத்தை சுரண்டிவிட்டு, அதையே மக்களுக்கு தற்போது சில்லரையாக கொடுக்கிறார்கள். அது வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. நேர்மை எல்லாரிடத்திலும் இருக்க வேண்டும். சுதந்திரம் மக்களுக்கு கிடைக்காமல் புரையோடி போய்விட்டது. இனியும் அதை பார்த்து கொண்டு இருக்க முடியாது.

மக்களாகிய நீங்கள் ஒரு விரலில் வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்துவதன் மூலம் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கலாம். அதன் மூலம் துரோக சாம்ராஜ்யத்தை ஒழிக்கலாம். மக்கள் கையில்தான் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆயுதம் உள்ளது.

நீங்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு உங்கள் முகத்தை பார்த்து தலைவா என்று அழையுங்கள். நீங்கள் தான் தலைவர். நான் தலைவன் அல்ல, மக்களுக்கான சேவகன். சேவை செய்ய புதிய அரசியலை வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com