கூட்டணியில் அமமுக இணைந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சி; பியூஸ் கோயல்

ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என்று பியூஸ் கோயல் கூறினார்.
சென்னை,
தமிழ்நாட்டில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.வரும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் அதில் பாமகவின் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.இதன் தொடர்ச்சியாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசியபோது இதனை உறுதிப்படுத்தினார்.
இதனை தொடர்ந்து டிடிவி தினகரன் இன்று காலை சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்தார். தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் டிடிவி தினகரன் புகைப்படம் எடுத்துக்கொண்டு கையை உயர்த்தி கூட்டணியை உறுதி செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பியூஸ் கோயல் கூறியதாவது: கூட்டணியில் அமமுக இணைந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஊழல் நிறைந்த திமுகவை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழ் கலாசாரம் மக்களுக்கு எதிராக திமுக உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும்.ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை வழங்குவோம்” என்றார்.






