

தேனி,
குரங்கணி மலைப்பகுதி காட்டுத் தீயில் சிக்கித் தவித்த 15 மாணவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீக்காயமடைந்த மாணவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போடி மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசின் வேண்டுகோளுக்கிணங்க விமானங்களை அனுப்ப மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டு உள்ளார். காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிக்கு மீட்பு பணிகளுக்கு இந்திய விமானப்படை அனுப்பப்படும், தென் பிராந்திய காமண்டர், தேனி ஆட்சியருடன் தொடர்பில் உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்து உள்ளார். கோவை மற்றும் அரக்கோணத்தில் இருந்து மீட்பு பணிக்கு மீட்பு பணிக்கு விமானப்படை விரைந்து உள்ளது எனவும் விமானப்படை மீட்பு குழுவுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணிக்கு முதல்கட்டமாக ஹெலிகாப்டர்கள் விரைந்து உள்ளது எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் போடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர் ஆறுதல் கூறினர். பின்னர் சிறு தீக்காயங்கள் அடைந்தவர்கள் போடி மருத்துவமனையில் இருந்து தேனிக்கு வேன் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர்.
போடியில் இருந்து தேனிக்கு அழைத்து செல்ல துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேன் ஏற்பாடு செய்தார். இரவு தேனி சுற்றுலா மாளிகையில் தங்க வைத்து காலையில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.