தெலுங்கு மக்கள் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி


தெலுங்கு மக்கள் குறித்து நான் அவதூறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி
x
தினத்தந்தி 4 Nov 2024 4:54 PM IST (Updated: 4 Nov 2024 5:54 PM IST)
t-max-icont-min-icon

தனக்கு எதிராக பொய் பிரசாரம் பரப்பப்படுவதாக நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் தனி சட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி ராஜாக்களுக்கு அந்தப்புர சேவைகள் செய்ய வந்தவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள் என்றும், அவர்கள் எப்படி தமிழர்களான பிராமணர்களை, தமிழர்கள் இல்லை என சொல்ல முடியும் என கேள்வி எழுப்பி இருந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

பின்னர் இன்று காலையில் தனது பேச்சுக்களை திரித்து சிலர் வெளியிட்டதாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தெலுங்கர்கள் குறித்த நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், நடிகை கஸ்தூரி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தெலுங்கு மக்களை நான் இழிவாக பேசியதாக 100 சதவீதம் பொய் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் பெருவாரியாக தெலுங்கு மக்கள் இருக்கிறார்கள். என் புகுந்த வீடு தெலுங்கு பேசும் ஒரு வீடு. என் மகள்களுக்கு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளும் இரண்டு கண்களாக மதித்து வளர்ந்து வருகிறார்கள். நான் தமிழச்சி... ஆனால் இங்கே இனவாதத்தை நான் பேசவில்லை.

எனக்கு எதிராக பரப்பப்படும் பொய் பிரசாரம் இது. தெலுங்கு இனத்தையோ, தெலுங்கு மக்களையோ நான் தவறாக பேசவில்லை. அது திரித்து பரப்பப்படுகிறது. எத்தனையோ பொய்களை பார்த்துவிட்டேன்; இதற்கு அச்சப்படமாட்டேன். தமிழர்களை, தமிழர்கள் இல்லையென்று சொல்லக்கூடிய திராவிட மாடல், திராவிட சித்தாந்தம் பேசக்கூடியவர்களை தான் நாங்கள் சொல்கிறோம். தெலுங்கர்களை பற்றி நான் பெருமையாக தான் பேசினேன்.

பிராமணர்கள் மீது மட்டும் ஏன் வன்மம் காட்டப்படுகிறது. அமைச்சரவையில் பிராமணர்களுக்கு இடமளிக்காதது ஏன்?. பிராமணர்களை அவதூறாக பேசும்போது எங்கே சென்றீர்கள்?. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story