‘திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி உயிர்தியாகம் செய்த பூரணசந்திரனை நினைத்து வருந்துகிறேன்’ - பிரதமர் மோடி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருகப்பெருமானின் பக்தர்கள் வெல்வார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
‘திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி உயிர்தியாகம் செய்த பூரணசந்திரனை நினைத்து வருந்துகிறேன்’ - பிரதமர் மோடி
Published on

மதுரை,

மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்று பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

இதனை தொடர்ந்து மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, தினகரன், ஜி.கே.வாசன், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜெகன்மூர்த்தி, ஜான்பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“அனைவருக்கும் வணக்கம். அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் தலை தாழ்த்தி வணங்குகிறேன். இது பாண்டிய நாடு, வீரம் விளையும் பூமி. இந்த மகத்தான பூமியில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாவீரர் அழகுமுத்துக்கோன், மாவீரர் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், இமானுவேல் சேகரனார் ஆகியோரின் மகத்தான பணிகளையும், சமூகநீதி மற்றும் கண்ணியத்திற்கான போராட்டங்களை நினைவு கூர்கிறேன்.

நான் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று முருக்கப்பெருமானை தரிசனம் செய்தேன். அது தெய்வீகமான அனுபவமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த தேசத்தின் நலனுக்காக இறைவனிடம் வேண்டினேன்.

அப்போது எனது இதயம் கனமாக இருந்ததை உணர்ந்தேன். திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றக் கோரி தற்கொலை செய்த பூரணசந்திரனை நினைத்து வருந்துகிறேன். அவரது மனைவி இந்துமதி பூரணசந்திரன் மற்றும் அவர்களது 2 குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். பூரணசந்திரனின் ஆன்மா முருகப்பெருமானின் காலடியில் இளைப்பாறுதல் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

தி.மு.க. அரசின் நேயமற்ற தன்மை காரணமாகவே இது நடந்திருக்கிறது என்பது வலியை ஏற்படுத்துகிறது. தி.மு.க. என்ன செய்தாலும், இறுதியில் வாய்மையே வெல்லும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முருகப்பெருமானின் பக்தர்கள் வெல்வார்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com