கரூர் வெற்றியை உறுதி செய்ததால் செந்தில் பாலாஜிக்கு கோவை பொறுப்பு கொடுத்துள்ளேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

பா.ஜ.க. தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கரூர் வெற்றியை உறுதி செய்ததால் செந்தில் பாலாஜிக்கு கோவை பொறுப்பு கொடுத்துள்ளேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

கரூர்,

கரூரில் ராயனூர் பகுதியில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பல திட்டங்களை வழங்கி உள்ளோம். சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன்தான் இந்த ஸ்டாலின். எந்த மாநிலமும் இது போல திட்டங்களை செய்ய முடியாது என நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்.

தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க அ.தி.மு.க. - பா.ஜ.க.வினர் பரப்பிய பொய் செய்திகள் புஸ்வானம் ஆகிவிட்டது. சதித் திட்டங்கள் எல்லாம் சந்தி சிரித்துவிட்டது. அவதூறு பிரசாரங்கள் எல்லாம் தவிடுபொடி ஆகிவிட்டது. டபுள் எஞ்ஜின் டப்பா என்ஜினை வீழ்த்தி, திராவிட மாடல் சூப்பர் பாஸ்ட் எஞ்ஜின், சூப்பர் ஸ்டாரான தேர்தல் அறிக்கையோடு வந்துள்ளது.

புதிய திட்டங்களை நிறைவேற்றி சாதனைகளை செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சி. ஆனால் மக்களுக்கு வேதனைகளையும், சோதனைகளையும் தந்ததுதான் அ.தி.மு.க. ஆட்சி. நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வைக்கவில்லை என்ற விரக்தியில், இன்று வரை பா.ஜ.க. தமிழ்நாட்டை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் சொல்வது போல, மணிக்கொரு முறை தான் ஒரு மங்குனி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவர் புலனாய்வுப் புலி என நினைத்து காமெடி செய்கிறார். வாஜ்பாய் உடன் நாங்கள் கூட்டணி வைத்தோமே தவிர, உங்களை போல அடகு வைக்கவில்லை. நாங்கள் பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்தபோது தி.மு.க. கட்சி கலைஞரிடம்தான் இருந்தது, ஆனால் இப்போது அ.தி.மு.க. அமித்ஷாவிடம் இருக்கிறது.

கரூரை பொறுத்த வரை எனக்கு எந்த கவலையும் இல்லை. ஏனெனில் இது செந்தில் பாலாஜியின் மாவட்டம். நிச்சயம் 100 சதவீதம் வெற்றி உறுதி. கரூரில் தி.மு.க. கூட்டணி வெற்றியை அவர் எப்போதோ உறுதி செய்ததன் காரணமாகத்தான் கோவை மாவட்டத்தில் இருக்க சொல்லி அவருக்கு பொறுப்பு கொடுத்திருக்கிறேன். இந்த முறை கரூர், கோவை இரண்டுமே நம் வசம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com