‘இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை’ - கரூர் எம்.பி. ஜோதிமணி

காரணத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை என ஜோதிமணி தெரிவித்தார்.
கரூர்,
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மேலும் பலர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இதனிடையே கரூர் எம்.பி. ஜோதிமணி, அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள நிலவரம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.
தற்போது நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் தற்போது உடல்நலம் தேறி வருகின்றனர் என்பதுதான். அனைவருக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று சுமார் 10 மணி நேரமாக பலர் காத்திருந்துள்ளனர். பலருக்கு நீர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப் பற்றி யோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.
கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






