எனக்கு ஓய்வே கிடையாது: டிஸ்சார்ஜ் ஆன பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் குழுவினர் பரிசோதித்தனர். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது.
தொடர்ந்து அவர் டாக்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர், மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்ற டாக்டர் ராமதாசை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மற்றும் தமிழக சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதேபோன்று இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினிகாந்த், ராமதாசை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.
இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த அவரிடம், ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினார்களா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், எனக்கு ஓய்வே கிடையாது என கூறினார்.






