

சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழும் தமிழ்நாடும் நம் உயிர்! அவற்றைக் காப்பது நம் கடமை!உழைப்பைத் தவிர வேறொன்று அறியேன் எனச் சொல்லி, இளமை முதல் 73-ஆம் வயது காணும் இந்நாள் வரையில், நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பணியாற்றுவதே என் வாழ்நாள் கடமை எனச் செயலாற்றி வருகிறேன். தமிழும் தமிழ்நாடும் தலைநிமிர்ந்த வரலாற்றில் நான் சிறுதொண்டனாய் இருந்தாலும், கிடைக்கின்ற வாய்ப்புகளில் எல்லாம் பெருந்தொண்டாற்றிடவே நினைக்கிறேன்.அந்த உறுதியோடுதான், திராவிட மாடலில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கி, முன்னேற்றப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில், இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறேன்.கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் உள்ளத்திலும் இல்லத்திலும் போய்ச் சேர்ந்துள்ளது திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களும், சாதனைகளும்!தனிக்குணம் கொண்ட தமிழர் தலைநிமிர்ந்து வாழ்கின்றனர்; நாட்டிற்கே புத்தொளியை வழங்குகின்றனர் என்று புகழும் வகையில் தமிழ்நாடு உயர்ந்து நிற்கிறது!
நம் தமிழினத்தின் இலட்சியப் பயணத்தில், நம் கால்கள் பாதை மாறக் கூடாது; நம் தலை யாரிடமும் எதற்காகவும் தாழக் கூடாது! சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அறிவுத்திறத்தால் - நாம் அனைவரும் ஒன்றிணைந்து முறியடித்திட வேண்டும். இதற்காக என்னை இன்னும் முழுமையாக ஒப்படைத்துக் கொள்வேன். இதுவே என் பிறந்தநாள் உறுதிமொழி!தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் நமக்குக் காட்டிய பாதையில், #தமிழ்நாடு_போராடும்_#தமிழ்நாடு_வெல்லும் எனப் போர்க்குணத்தோடு பயணித்து #வெல்வோம்_ஒன்றாக!” என்று பதிவிட்டுள்ளார்.