நடிகர் ரஜினிகாந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் - ஆதவ் அர்ஜுனா

234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்திடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன் - ஆதவ் அர்ஜுனா
Published on

சென்னை,

த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, "தனக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டு காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்," என்று தெரிவித்து இருந்தார்.

கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, "ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் கொடுக்க வேண்டும். நான் இன்று நல்ல நிலைமையில் நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த்," என்று தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அடுத்ததாக கூட்டத்தில் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசியதற்கு வருத்தமும், மன்னிப்பும் கேட்டார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

“234 தொகுதிகளிலும் தவெக தனித்து போட்டியிடுகிறது. 50-50, இரண்டரை வருட முதல்-அமைச்சர் என பல ஆபர்களை தவெக தலைவர் விஜய்க்கு கொடுத்தார்கள். ஆனால், அனைத்து ஆபர்களையும் விஜய் நிராகரித்துவிட்டார். மேலும், உண்மையான மதசார்பற்ற ஆட்சியை நாம் கொடுப்போம் என எங்களிடம் விஜய் கூறினார்.

தலைவர் ரஜினிகாந்த் உங்கள் மீது எங்களுக்கு வெறுப்பு கிடையாது, அன்பு மட்டும்தான் இருக்கிறது. ரஜினியை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியமோ, அல்லது பயந்துவிட்டார் என்பதையோ நான் சொல்லவில்லை. திமுகவின் சூழ்ச்சி என்றுதான் கூறினேன்.

நான் சொல்லவந்த நோக்கம் வேறு. நான் பேசியது உங்களுக்கு வருத்தத்தை கொடுத்திருந்தால், அதற்காக எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாக கேட்டுக்கொள்கிறேன். வேறு யாருக்கும் பதில் கொடுக்க இங்க வரவில்லை. ரஜினிகாந்த் அறிக்கையை படித்தேன். அவரது உணர்வுக்கு மரியாதை கொடுக்கிறேன்”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com