ஞாபகம் வருதே... மறைந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!


ஞாபகம் வருதே... மறைந்துபோன பொங்கல் வாழ்த்து அட்டைகள்!
x

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கியவர்களும் ஆர்வத்துடன், யாரிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது? என்று பிரித்து பார்த்து தெரிந்துகொள்வார்கள்.

இப்போது புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என எந்த பண்டிகை வந்தாலும் வாட்ஸ்-அப் மூலம் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்வது வழக்கமாகிவிட்டது. ஆனால், செல்போன் வருகைக்கு முந்தைய காலம், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பின்தங்கிய காலத்தில், அதாவது 2000-ம் ஆண்டுக்கு முன்பு வரை வாழ்த்து அட்டைகள் அனுப்புவதுதான் வாடிக்கையாக இருந்து வந்தது.

இன்றைக்கு வீட்டுக்கு எப்போதாவது வரும் தபால்காரர்கள் (போஸ்ட்மேன்) தெரியாத நபராகி போனார்கள். அன்றைக்கு சைக்கிளில் ஊருக்குள் நுழையும் போதே, "சார்.. எனக்கு ஏதாவது தபால் வந்திருக்கிறதா?" என்று தபால்காரரிடம் கேட்பதும், அவரும், "உங்களுடைய பெயர் என்ன?" என்று கேட்டு, கையில் மற்றும் பையில் இருக்கும் கடிதங்களை புரட்டிப் பார்த்துவிட்டு, "உங்களுடைய பெயருக்கு கடிதம் எதுவும் வரவில்லை" என்று கூறிவிட்டு செல்வார்.

காக்கி உடையில் மிடுக்காக வரும் தபால்காரர்கள், அன்றைக்கு அனைவரது கண்களுக்கும் ஹீரோவைப் போல் ஜொலித்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் அடையாளம் தெரியாமல் போனதுபோல், அவர்கள் கொண்டுவந்து கொடுத்த கடிதங்களும் காணாமல் போய்விட்டன.

இன்றைய இளைஞர்களுக்கு அன்றைய வாழ்த்து அட்டைகள் பற்றி அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் ஏற்படும் பூரிப்பையும் உணர முடிவதில்லை. அன்றைக்கு புத்தாண்டு, பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் என்று எந்த மத பண்டிகை வந்தாலும் அதற்கான வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யும் கடைகள் ஆங்காங்கே முளைத்துவிடும்.

1 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை வகை வகையான வாழ்த்து அட்டைகள் பரந்து.. விரிந்து பரப்பி வைக்கப்பட்டிருக்கும். பொங்கல் பண்டிகை என்றால், பொங்கல் பானை, கரும்பு, சூரிய உதய காட்சிகள் வாழ்த்து அட்டையில் இடம்பெற்றிருக்கும். இதுபோக, நடிகர் - நடிகைகளின் படங்களுடன் கூடிய வாழ்த்து அட்டைகள் விதவிதமான போஸ்களில் விற்பனைக்கு வந்திருக்கும்.

யாருக்கு எந்த நடிகர், நடிகையை பிடிக்குமோ?, அந்த வாழ்த்து அட்டையை வாங்கி, கவரில் வைத்து வெளியே 3 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, அருகில் உள்ள தபால் பெட்டியில் கொண்டுபோய் போடுவார்கள். அதை குறிப்பிட்ட நேரத்தில் தினமும் வந்து எடுக்கும் தபால்காரர் எடுத்துக்கொண்டு தபால் அலுவலகத்திற்கு செல்வார். அங்கே உள்ள ஊழியர்கள் அது எந்த ஊருக்கு போகும் வாழ்த்து அட்டை என்பதை பார்த்து, ஸ்டாம்ப் மீது சீல் வைத்து, குறிப்பிட்ட ஊருக்கு செல்லும் வாகனத்தில் அனுப்பிவைப்பார்கள். மறுநாள் அந்த தபால் குறிப்பிட்ட ஊரில் உள்ள தபால்நிலையத்தை சென்றடையும். அங்குள்ள ஊழியர்கள் அதில் உள்ள முகவரியை பார்த்து, அந்த பகுதிக்கு செல்லும் தபால்காரரிடம் கொடுத்து அனுப்புவார்கள். அவர்களும் இதுபோன்ற சேர்ந்த கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை மொத்தமாக எடுத்துக்கொண்டு சைக்கிளில் செல்வார்கள். பின்னர், உரிய முகவரிக்கு சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுப்பார்கள். எப்படியும் இவை அனைத்தும் நடந்து முடிக்க 3 நாட்கள் ஆகிவிடும்.

தபால்காரரிடம் இருந்து வாழ்த்து அட்டையை வாங்கியவர்களும் ஆர்வத்துடன், யாரிடம் இருந்து வாழ்த்து வந்துள்ளது? என்று பிரித்து பார்த்து தெரிந்துகொள்வார்கள். வாழ்த்து அட்டையையும் நீண்டநாட்கள் பொக்கிஷம் போல் பாதுகாப்பார்கள். வாழ்த்து அட்டை அனுப்பியவரை பின்னர் ஒருநாள் நேரில் பார்க்கும்போது, வாழ்த்து அட்டை வந்ததை நினைவு கூர்ந்து நன்றி தெரிவிப்பார்கள்.

இதுதான் அன்றைய வசந்த காலம். ஆனால், பரபரப்பு மிகுந்த இந்த கால இளைஞர்களுக்கு வாழ்த்து அட்டை என்றாலோ, கடிதப் போக்குவரத்து என்றாலோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலக நிகழ்வு தகவல்கள் விரல் நுனிக்கே இப்போது செல்போன் மூலம் வந்துவிடுவதால், பழைய கால பொக்கிஷங்களை அறிய யாரும் ஆர்வம் காட்டுவதும் இல்லை. இன்றைக்கு 30 வயதை கடந்தவர்கள், அன்றைய பொங்கல் வாழ்த்து அட்டை ஞாபகங்களுடன் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவோம்.

1 More update

Next Story