

சென்னை,
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அவரது குடும்பத்தினர், ஈரான் பாதுகாப்புத்துறை மந்திரி அமீர், ஈரான் புரட்சிப்படை தளபதி முகமது உள்பட 787 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டத்தை கண்டித்து சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் , இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்த போராட்டத்தில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இஸ்ரேல் - ஈரான் போரை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும். அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தி மத்திய அரசு அமைச்சரவையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இலங்கை சேர்ந்த ஈழத்தமிழர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள், தமிழர்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட வேண்டும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரான் உச்ச தலைவர் காமேனியை படுகொலை செய்திருப்பதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறது.
என்றார்.