தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின்

திமுகவைப் போல் காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்தியவர்கள் வேறு யாருமில்லை என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சூரியன் ஒருபோதும் மறையாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது. இது இயற்கை நியதி மட்டுமில்ல, தமிழ்நாட்டு அரசியல் நியதியும் இதுதான். நடந்து முடிந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இப்போது அமைந்திருக்கும் அரசும், கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் ஆட்சியை அமைத்திருக்கிறது. அதுவும் நம்முடன் சேர்ந்து வெற்றி பெற்றவர்களின் ஆதரவோடுதான் ஆட்சி அமைத்திருக்கிறது.

நமக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லையே தவிர, கணிசமான எண்ணிக்கையில் வாக்குகள் கிடைத்திருக்கிறது.

கொஞ்சம் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் 1989-ல் நாம் ஆட்சி அமைத்தோம். அடுத்து நடைபெற்ற 1991 தேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே ஜெயித்தோம். 1996-ல் மீண்டும் நம் ஆட்சி, ஆனால் அடுத்து வந்த 2001 தேர்தலில் நாம் வென்ற இடங்கள் 37 தான். அதே போல 2006-ல் திமுக ஆட்சி அமைத்தது. 2011-ல் வெறும் 31 இடங்கள்.

இப்படி ஆட்சியில் இருந்து தோற்றபோதெல்லாம் நாம் மிகக் குறைந்த இடங்களிலேயே வென்றிருக்கிறோம். இப்பொழுது 59 இடங்களில் வென்றிருக்கிறோம். கூட்டணி எண்ணிக்கையை எல்லாம் சேர்த்துப் பார்த்தால் 73 இடங்கள். கடந்த முறைகளை ஒப்பிடும்போது இது கூடுதல் எண்ணிக்கை. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடுதான்.

பொதுவாழ்க்கைக்கு வந்தால் வெற்றி தோல்வி சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மேடு பள்ளங்கள் இருக்கும். அதுதான் அரசியல். என்னைப் பொறுத்த வரையில, கடந்த ஐந்தாண்டு காலமும் கடுமையாக உழைத்தேன். உங்களையும் உழைக்க வைத்தேன். இதுவரை எந்த அரசும் செய்து தராத சாதனைகளை நாம் செய்து கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களுக்கு நேரடிப் பயன் தரும் ஆட்சியாக நம் ஆட்சி இருந்தது. இது மக்களுக்குத் தெரியும். இருந்தாலும் நாம் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதற்காக, நான் யாரையும் சுட்டிக்காட்டி குறை சொல்ல விரும்பவில்லை. தோல்விக்கான காரணங்களை கழக நிர்வாகிகள் தொடங்கி, பொதுமக்கள் வரை எல்லா விதமாகவும் பேசுகிறார்கள். ஒருவர் இன்னொருவரை குற்றம் சொல்லுகிறார். அவர் இன்னொருவரை கை காட்டுகிறார். இப்படி குற்றம் சொல்லிக்கொண்டே இருந்தால், இதற்கு ஒரு முடிவே இருக்காது. இதற்கு யாருதான் பொறுப்பு? யாரும் யாரையும் குறை சொல்லாதீர்கள். கழகத்தின் தலைவர் என்ற முறையில், நானே இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதுதான் நிதர்சனம்.

வெற்றி கிடைத்தால் அந்த பெருமையை அடையும் நான், தோல்விக்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. அதுதான் நியாயம். இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி. சுனாமி என்றால் சாகசமோ, சாதனையோ கிடையாது. பெரும் பாதிப்பு என்ற பொருளில் சொல்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களை பாதித்திருக்கும் சுனாமி பேரழிவு இது.

இது ஒரு தேர்தல் சுழல்தானே தவிர, நாம் எழும்பவே முடியாத தோல்வி இல்லை. இனி, கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு, நம் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு வேலை செய்ய வேண்டும். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தலைமைக் கழகத்தின் சார்பில் கள ஆய்வு நடத்தி அறிக்கை தர ஒரு குழுவை அமைக்கப் போகிறேன். அவர்கள் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக, எல்லா தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி அடுத்த 20 நாட்களுக்குள் எனக்கு அறிக்கை கொடுப்பார்கள்.

உடன்பிறப்புகள் வெளிப்படையாக தகவல் சொல்வதற்காக தனி 'வெப்சைட்’ நாளை அறிவிக்கப்படும். தலைமைக் கழகத்தால் அமைக்கப்படும் விசாரணைக் குழு, வெப்சைட் மூலமாக கழகத்தின் உடன்பிறப்புகள் மற்றும் நம் மேல் அக்கறை கொண்ட பொதுமக்கள் சொல்லும் ஆலோசனைகளை வைத்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம் என்று இருக்கிறேன். அந்த மாற்றம்தான், நம் கழகத்தை இன்னும் நூறாண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்திருக்கப் போகிறது.

இந்த தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இதையெல்லாம் தாண்டிய களமாக சமூக வலைதளங்கள் உருவெடுத்திருக்கிறது. திமுகவைப் போல் காலத்திற்கேற்ப ஊடகங்களைப் பயன்படுத்தியவர்கள் வேறு யாருமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com