ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு மிகவும் மன வருத்தப்பட்டேன்: ஜான் பாண்டியன்

குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்று ஜான் பாண்டியன் கூறினார்.
நெல்லை,
நெல்லையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கிய காலத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக நான் பதவி வகித்து உள்ளேன். ராமதாஸ் கண்ணீர் விட்டதைக் கண்டு நான் மிகவும் மன வருத்தப்பட்டேன் வன்னியர்களுக்காக போராடிய போராளி கண்ணீர் விட்டது வருத்தத்திற்குரியது. கட்சியின் நிறுவனத்தலைவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இணைய வேண்டும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும்.
இருவரை இணைப்பது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து பேசுவேன். தமிழகத்தில் சிறார் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறார்கள் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதற்கு தாய்-தந்தை தான் பொறுப்பு. அவர்களின் வளர்ப்பு சரியில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் சிறார்களின் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் பிள்ளைகளை திருத்துவார்கள். பொங்கல் பரிசாக தமிழக அரசு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். விஜய் கட்சி எங்கள் கூட்டணியில் இணைந்தால் ஏற்றுக்கொள்வோம். அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.






