“காங்கிரஸ் கட்சியில் 6 ஆண்டு இருந்தேன்; ஆனால் அங்கு மரியாதை இல்லை” - நடிகை குஷ்பு

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் எந்த மரியாதையும் இல்லை என்று பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
“காங்கிரஸ் கட்சியில் 6 ஆண்டு இருந்தேன்; ஆனால் அங்கு மரியாதை இல்லை” - நடிகை குஷ்பு
Published on

சென்னை,

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த நடிகை குஷ்பு, நேற்று டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரை சந்தித்து தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டார். அவரது இந்த திடீர் முடிவிற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது;-

நான் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இருப்பதற்கான முக்கிய காரணம் பாஜக மாநில தலைவர் திரு.எல்.முருகன் அவர்களால் தான். அவர் எடுத்த முயற்சியின் காரணமாக தான் என்னால் இந்த கட்சியில் சேர முடிந்தது. அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் கட்சியை வளர்ப்பதற்காக ஒரு தலைவர் தனது கட்சியைப் பற்றி, தனது கட்சியால் தான் இந்த நாட்டிற்கு நல்லது செய்ய முடியும் என்று அனைவரிடமும் பேசி அழைக்கிறார். இன்னொறு தலைவர் 6 ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்த பிறகு வெறும் நடிகையாக மட்டுமே பார்ப்பதாக கூறுகிறார். கட்சியில் இருப்பவர்களுக்கும், வெளியேறுபவர்களுக்கும் அங்கு மரியாதை கிடையாது. ஏன் வெளியேறுகிறார்கள் என்பது பற்றி யோசிப்பது கிடையாது.

திமுகவில் இருந்து வெளியேறிய போது நான் குற்றச்சாட்டுகள் எதுவும் வைக்கவில்லை. காங்கிரசில் இருந்து வெளியேறிய போதும் நான் குற்றச்சாட்டு எதுவும் வைக்கவில்லை. ஆனால் நான் வெளியேறிய பிறகு என்னைப் பற்றி தவறாக பேசியவர்களுக்கு நிச்சயம் பதிலடி கொடுத்தே ஆக வேண்டும். காங்கிரஸ் சார்பாக என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் கட்சி அலுவலகமான கமலாலயம் சென்ற நிச்சயம் பதில் அளிப்பேன் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com