

சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக துண்டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தாய்க் கழகத்துக்கு ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்கிறேன் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சரும் அருமைச் சகோதரருமான ஓ.பன்னீர்செல்வம் தாய்க்கழகமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார். அவரை வருக வருக என வரவேற்கிறேன். திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவரின் பெயரைத் தாங்கிய அவர் திராவிட இயக்கக் கொள்கை காக்கும் நம் பேரியக்கத்தில் இணைந்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் என்பது தமிழ்நாட்டுக்கும் பாசிச பாஜகவுக்கும் இடையிலான ஜனநாயகப் போர். இதனை உணர்ந்துதான் பல்வேறு ஜனநாயக சக்திகளும் கழகக் கூட்டணியில் இணைந்து வருகிறார்கள். நம்மோடு இணைந்துள்ள சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அன்பானவர், பண்பானவர், அடக்கமானவர்! அவரது வரவு நல்வரவாகட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.