தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனை வரவேற்கிறேன் - எடப்பாடி பழனிசாமி

கோப்புப்படம்
அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளவும், எதிர்க்கட்சியான அதிமுக ஆட்சியை பிடிக்கவும் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மக்கள் நீதி மய்யம் என பல கட்சிகள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதுபோக, சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், கூட்டணிக்கு பிற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தாலும் முதல்-அமைச்சர் வேட்பாளர் விஜய்தான் என்று கூறிவருகிறது.
இந்த சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி கட்சிகளின் முதல் பிரசார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் 23-ந்தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக (அன்புமணி), தமாக, புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. இதனிடையே அதிமுக - பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரனை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






