

சென்னை,
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
பாட்டாளி தொழிலாளர் வர்க்கம் வேலை செய்வதற்கு விதிக்கப்பட்ட கொடுமைகளை உலக அளவில் 19-ம் நூற்றாண்டில் குரல் கொடுத்து தொழிலாளர்களின் வேலை நேரத்தை சட்டமாக்க உலக அளவில் தொழிலாளர்களின் பல போராட்டங்களை தொடர்ந்து உலக நாடுகளில் பல நாடுகளில் தொழிலாளர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு உரிமை பெற்றனர். இது தொழிலாளர்களின் ஒற்றுமையால் வலு பெற்றது.
1989 மே முதல் நாள் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. அதற்கு அடுத்த ஆண்டே 1990 மே 1-ம் நாள் முதல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்கள் வர்க்கத்தினர் உரிமை பதாகை உயர்த்தி பிடித்தனர். அதுவே தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டது. இன்று வரை மே 1 உழைக்கும் வர்க்கத்தின் நாளாக கொண்டாடப்படுவது பெருமைக்குரியதாக உள்ளது.
ஓய்வறியா உழைப்பின் சக்கரமாக உயரத் துடிக்கும் மனிதர்களான தொழிலாளர்கள், வானுயர்ந்து அமைக்கப்பட்ட சின்னங்கள், தொழிற்சங்கங்களின் உழைப்பின் சாட்சிகள். உழைப்பு என்பது வெறும் பிழைப்பு அல்ல. அது ஒவ்வொரு தொழிலாளிகளும் சிந்தும் வியர்வை துளிகள் எல்லாம் இந்த தேசத்தின் மகுடத்தின் முத்துகள். ஆகவே மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கடின உழைப்பை உடைய பாட்டாளிகளுக்கும், உழைப்பாளிகளுக்கும், உலகில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
உழைப்பாளிகள் உரிமைகளை பாதுகாக்க பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பிலே உழைக்கும் தொழிலாளர்கள் வர்க்கத்திற்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றேன் நான். உழைக்கும் தொழிலாளர் உரிமைக்காக தொடர்ந்து உறுதுணையாக இருப்பேன் என்பதோடு இந்த மே தின நாள் வாழ்த்துகளை உழைக்கும் வர்க்கத்திற்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.