

சென்னை,
தவெக தலைவர் விஜய் நேற்று முன்தினம் வேலூர் மாவட்டத்தில் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அந்த கூட்டத்தில் விஜய் கூறிய குட்டிக்கதையை விமர்சித்து பிக்பாஸ் ஜூலி வீடியோ வெளியிட்டிருந்தார். விஜய்யை விமர்சித்து வீடியோ வெளியிட்டதால், அவரது ரசிகர்கள் பலரும் ஜூலியை விமர்சித்து கருத்துகள் பதிவிட்டனர்.
இந்த நிலையில் விஜய் ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு விஜய் வெளியிட்ட வீடியோவைப் போலவே, பேசி ஜூலி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் ஜூலி கூறியிருப்பதாவது:-
விஜய் அண்ணா உங்க வேலூர் பரப்புரை பார்த்து, அதில் எதுவும் இல்லைங்கிற ஆதங்கத்தில் ஒரு வீடியோ போட்டேன். அதை பார்த்த உங்க ரசிகர்கள்.. ஆமாம், அவர்கள் ரசிகர்கள் மட்டும்தான். ஏன் என்றால் இன்னும் அரசியல் வயப்படவில்லையே. அவர்கள் எல்லா சமூக வலைதளங்களிலும் என்னை கடித்து வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த மைனர் பசங்க கிட்ட இருக்கிறது முக்கால்வாசி போலி ஐடிகள் தான் இருக்கிறது. அதை வைத்துக் கொண்டுதான் என்னை மிரட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதற்காக பயந்து நான் அந்த வீடியோவை நீக்கவும் மாட்டேன், எனது கருத்துக்களில் இருந்து பின் வாங்கவும் மாட்டேன். என்னை மிரட்டினால் பரவாயில்லை, ஆனா என்னைச் சார்ந்தவர்களையும் மிரட்டுவதால் இதைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். விஜய் அண்ணா உங்களுக்கு என்னை பழி வாங்கணும்னா நான் என் வீட்டில இருப்பேன், இல்லைனா ஆபீஸ்ல இருப்பேன். என்னை என்ன வேணாலும் பண்ணுங்க. ஆனால் அவங்களை விட்டுவிடுங்க.
ஓ நீங்க பனையூரை விட்டு வெளியே வரமாட்டீங்கல்ல?. நான் இன்னும் உயிரோட தான் இருக்கிறேன், நான் வேண்டுமானால் பனையூர் வருகிறேன். என்னைத் திட்டுனா என்னை திட்டுற மாதிரி தான். மக்களைத் திட்டுவது போல என்று யாரையும் உள்ளே இழுத்துப் போட மாட்டேன். ஒரு பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் எவ்வளவு மரியாதையும், மதிப்பும், பாதுகாப்பும் உங்க ரசிகர்கள் கொடுக்கிறார்கள் என்பதை அந்த வீடியோவுக்கு கீழ் இருக்குற கருத்துகளை நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.